வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இந்திய ஆண்கள் அணியின் உலகக் கோப்பை பயணத்தின் மீது இருக்க…
இங்கிலாந்தை இங்கிலாந்திலேயே வைத்து தரமான சம்பவம் செய்திருக்கிறது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 3-0 என்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.
“காட்டு பூ யார் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது பூத்துக் கொண்டே தான் இருக்கும் என்பார்கள்…” அதுபோலத்தான் இதுவரை இருந்தது இந்திய பெண்கள் அணியும்… ஆனால் இனி அப்படி இருக்காது என இந்த வெற்றியின் மூலம் உரக்கச் சொல்லியிருக்கிறது இந்திய பெண்கள் அணி..! லார்ட்ஸ் மைதானத்தில் வென்றதன் மூலம் உலக அரங்கையே தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது இந்த அணி. அதில் சில சர்ச்சைகள் இருந்தாலும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சொன்னது போல “வெற்றி… வெற்றி தான்..!”
ஒரு கலைஞனுக்கு முக்கியம் காசோ, பணமோ, பொருளோ அல்ல ரசிகர்களின் கைத்தட்டல் தான் என்பார்கள். மேடையேறும் கலைஞனுக்கே அப்படி என்றால்… உலகத்தரம் வாய்ந்த அரங்கில், மைதானங்களில் போர் வீரர்கள் போல எதிரிணியோடு சண்டை செய்து வெற்றிக்காக களத்தில் போராடும் வீரர்களுக்கு ரசிகர்களின் ஆதரவும், கைத்தட்டலும், உற்சாகமும் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும். ஆனால் அது எதுவுமே இல்லாமல் இத்தனை ஆண்டு காலமும் போராடி சண்டை செய்துக் கொண்டே தான் இருந்தனர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர். சச்சின், சேவாக், தோனி, கோலி, ரோஹித் என ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களை ஹீரோகளாகவும், இன்ஸ்பிரேஷனாகும் கொண்டாடும் கிரிக்கெட் ரசிகர்கள் பாதி பேருக்கு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பெயரே தெரியாது என்பது தான் உண்மை. இருந்தாலும் இத்தனை ஆண்டு காலமும் என்றாவது ஒரு நாள் நிச்சயம் கவனிக்கப்படுவோம் என்ற விடாமுயற்சியோடு உழைத்து இன்று சரித்திரம் படைத்து… கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர் நம் பெண்கள் கிரிக்கெட் அணியினர்.
இதுவரை இந்திய பெண்கள் அணி “எப்படி” இருந்ததோ தெரியாது… ஆனால் இனி “அப்படி” இருக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் சதமும் (143*), ரேணுகா சிங் தாக்கூரின் யார்கரும், தீப்தி ஷர்மாவின் “மன்கட்” முறை விக்கெட்டும், இந்த “தொடர்” வெற்றியும் உலகரங்கில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மீது ஒட்டுமொத்த கவனத்தையும் திரும்பியுள்ளது.
இந்தத் தொடரில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என “அந்த ஏரியா… இந்த ஏரியா… ஆல் ஏரியாவுலும் ஐயா கில்லி..” என அனைத்து துறைகளிலும் கில்லியாக பட்டையை கிளப்பி வெற்றியை வேட்டையாடி உள்ளது நமது பெண்கள் கிரிக்கெட் அணி. முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ம்ருதி மந்தனாவின் 91 ரன்கள் உதவியால் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் (143 நாட் அவுட்) அதிரடியால் 88ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் ரேணுகா சிங் தாக்கூரின் அபாரமான பந்து வீச்சால் 16ரன்களிலும் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. இந்த தொடரில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் பேட்டிங்கும், ரேணுகா சிங் தாக்கூரின் பந்துவீச்சும் இங்கிலாந்து அணியினரை நிலைகுலைய செய்துவிட்டது எனலாம். அதுவும் பந்து வீச்சில் பெண்கள் அணியின் “பும்ரா”வாக விளங்கும் ரேணுகா சிங் தாக்கூரின் ஸ்பெல் ஒவ்வொன்றும் அசாத்தியமானது.
“யார்க்கர்கள்” ஒவ்வொன்றும் எதிரணிக்கு ஆபத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸின் 29.3 வது ஓவரில் ரேணுகா சிங் வீசிய தரமான “யார்க்கர்” இங்கிலாந்து வீராங்கனை கண் இமைப்பதற்குள் ஸ்டம்பை பதம் பார்த்தது. அந்த பந்தை மீண்டும் மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அந்த பந்து தான் இந்த ஒட்டுமொத்த தொடரிலும் “தி பெஸ்ட்” ஸ்பெல் ஆகும். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 170 ரன்கள் மட்டும் எடுத்து குறைந்த ரன்களை அட்டகாசமாக டிபன்ட் செய்து… லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்ய மிகவும் முக்கிய காரணமாக இருந்தது ரேணுகா சிங் தாக்கூரின் பந்துவீச்சு. இந்த போட்டியில் இருபத்தி ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருப்பார் ரேணுகா சிங் தாக்கூர்.
இப்படி பல சுவாரஸ்யங்களும், சில சர்ச்சைகளும் நிறைந்து அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் முடிந்திருக்கிறது இந்த தொடரின் கடைசி போட்டி. இதில் முக்கிய அம்சமாக வேகப்பந்து வீச்சாளர் “ஜுலன் கோஸ்வாமி”யின் இருபது ஆண்டுகால கிரிக்கெட் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இத்தனை ஆண்டு காலம் இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கிய கோஸ்வாமி இதுவரை 204 ஒருநாள் போட்டிகளில் 255விக்கெட்டுகள் எடுத்து பெண்கள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் உள்ளார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்கு இருபது ஆண்டுகளாக விளையாடிய கோஸ்வாமிக்கு மறக்க முடியாத பரிசாக உலகப் புகழ் வாய்ந்த வரலாற்று மிக்க “லார்ட்ஸ்” மைதானத்தில் வெற்றிக் கோப்பையோடு விடை கொடுத்திருக்கிறது இந்திய பெண்கள் அணி. கோஸ்வாமியின் இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கு இதைவிட வேறு எது கொடுத்திருந்தாலும் ஈடாகி இருக்காது.
பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டிய கடைசி ஒருநாள் போட்டியில் தீப்தி ஷர்மா “மன்கட்” முறையில் செய்த ரன் அவுட் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வழக்கம் போல கிரிக்கெட் விதிமுறையின்படி இது சரி என்று சிலரும்… ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப் படி இது தவறு என்று சிலரும் விவாதித்து வருகின்றனர். மற்ற விக்கெட்களை போல தான் “மன்கட்” முறையும். அப்படி “மன்கட்” முறையில் விக்கெட் எடுப்பது தவறு என்றால் கிரிக்கெட் விதிமுறையை மாற்றி அமைக்கலாம் அல்லவா… அதைவிட்டுவிட்டு வீரர்களை வசைப்பாடுவதும், கண்ணீர் விட்டுக்கொண்டே வெளியேறுவதும் எந்த விதத்தில் சரியென புரியவில்லை. கிரிக்கெட் கவுன்சில் இந்த விதிமுறைக்கு விரைவில் ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும்.
அப்படியே “ஒருவேளை” தீப்தி ஷர்மா மன்கட் முறையில் விக்கெட் வீழ்த்தாமல் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தாலும்..!?! கோப்பையை இந்திய அணி தான் வென்றிருக்கும். ஏற்கனவே நடந்து முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரையும் வென்று விட்டு இருந்தது நமது இந்திய பெண்கள் அணி. இந்த தொடர் முழுவதுமே இந்திய வீராங்கனைகளின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. அதற்கு சாட்சியாக “தொடர் நாயகி” விருதை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும், “ஆட்ட நாயகி” விருதை இந்திய பெண்கள் அணியின் “பும்ரா” ரேணுகா சிங் தாக்கூரும் வென்றிருந்தனர்.
மித்தாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி போன்ற வீராங்கனைகள் போட்ட விதையால் தான் இன்று ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா,தீப்தி ஷர்மா, ஷபாலி வெர்மா, ரேணுகா சிங் தாக்கூர் போன்ற பல நம்பிக்கை நட்சத்திரங்கள் நிறைந்த பலமான அணியாக இந்திய பெண்கள் அணி விளங்குகிறது.
ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகரான திறமையும், ஆற்றலும் கொண்ட இந்திய பெண்கள் அணியும் சளைக்காமல் உலகளவில் பல தரமான வரலாற்று வெற்றிகளை பதித்து வருகிறது. இனி பெண்கள் கிரிக்கெட்டிற்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகும். “லார்ட்ஸ்” போன்ற மைதானங்களில் இவர்களின் வெற்றிக் கொடி பறக்கும். நமது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் சரித்திரம் படைக்கும்..!!!
-கோ.ராஜசேகர், தருமபுரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.