சென்னை பெரியார் திடலில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, யாரெல்லாம் இந்துக்கள் என அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. அதாவது, மனுஸ்மிருதியில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்கிப் பேசினார்.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆ.ராசா மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்துக்களை விபசாரி மகன் என்று ஆ.ராசா கூறியதாக குற்றம் சாட்டும் அவர்கள், ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்; மனுஸ்மிருதி சொல்லப்பட்ட கருத்துக்களைத்தான் சொன்னேன் என்று தெரிவித்துள்ள ஆ.ராசா, நீதிமன்றம் சென்று வழக்கு தொடரட்டும். ஆதாரங்களோடு காட்டி தோலுறிக்கிறேன் எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் வீரமணி, சீமான், வேல்முருகன் உள்ளிட்டவர்கள் ஆ.ராசாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், ஆ.ராசாவுக்கு ஆதரவாக திமுக தரப்பில் யாரும் பெரிதாக கருத்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையிலும் கூட இதே கருத்தை தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆ.ராசாவை கண்டித்து கடந்த 20ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. அந்த போராட்டம் கிட்டத்தட்ட வெற்றி என்ற நிலையில் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஆ.ராசாவின் சொந்த தொகுதியான நீலகிரியிலும் கூட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டே இருந்தன. தொடர்ந்து, ஆ.ராசா பிரச்சினையை பெரிதாக்கி திமுக இந்துக்களுக்கு விரோதி என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த பிரச்சினை பெரிதாக மாறுவதற்குள் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து இந்துக்களை சமாதானப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கட்சிக்குள்ளேயே வலுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்த பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வரும் திமுக தலைமை, நிலைமை பெரிதாக சென்றால் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கலாம் இல்லையென்றால் அமைதியாக சென்று விடலாம் என முடிவெடுத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் விசாரித்தபோது, முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கிலேயே ஆ.ராசா இருப்பதாக கூறுகிறார்கள். “ஆ.ராசா தெரிவித்த கருத்துக்கு உடன்பாடு இல்லையென்றால்தான் அதற்கு தலைமையோ அல்லது மற்றவர்களோ எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவரது கருத்தில் மாற்றுக் கருத்து இல்லையெனும் பட்சத்தில் அதுபற்றி ஏன் பேச வேண்டும்.?” என கேள்வி எழுப்புகிறார்கள்.
“திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை. இதனை எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களும் ஏன் தலைவரும் கூட பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்து மதத்தினுள் இருக்கும் ஒடுக்குமுறையைத்தான் நாங்கள் பேசுகிறோம். அதைத்தான் ஆ.ராசா எளிமையாக சொல்லியுள்ளார். அதுவும் அவர் சொல்லவில்லை. மனுஸ்மிருதியில் இருந்ததைத்தான் சொல்லியுள்ளார். திராவிட கருத்துக்களை அவர் வலுவாக பேசக் கூடியவர். ஆ.ராசா போன்றவர்கள்தான் எங்கள் கட்சிக்கு அவசியம். முதல்வரின் குட் புக்கிலேயே அவர் இருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஸ்டாலின் செல்ல மாட்டார். நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பிரச்சினை ஒன்றும் பெரிதல்ல; பாஜகவினர்தான் அரசியல் செய்வதற்காக பிரச்சினை பெரிது படுத்துகின்றனர். வேண்டுமானால் நீதிமன்றம் செல்லட்டும்; அங்கு நாங்கள் சட்டப்படி பார்த்துக் கொள்கிறோம்.” என்றும் கூறுகின்றனர்.
ஆ.ராசாவுக்கு எதிராக நீலகிரி தொகுதியில் சொந்த கட்சியினரே உள்ளடி வேலை பார்த்த தகவலும் கட்சித் தலைமைக்கு சென்றுள்ளது. அதன் காரணாமாகவே சில இடங்களில் கடையடைப்புகள் நடந்துள்ளன. இந்த பிரச்சினையை தலைவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.