“மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது.” இது தந்தை பெரியார் சொன்னது. “அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால் வேகமாகச் சுழற்றுகிறார்கள். நாம் கையில் ஆட்சி – மக்கள் நலன் எனும் அரிசியும் பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பு என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.” இது பேரறிஞர் அண்ணா சொன்னது.
இந்த இரண்டு கூற்றுகளையும் உள்ளடக்கி முதல்வரும்,
தலைவருமான
அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆ.ராசா கருத்துக்கு திமுக தரப்பில் இருந்து யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், கொள்கைப் பிடிப்பு வாதிகளின் பக்கம் எப்போதும் திமுக நிற்கும் என்று மீண்டும் ஒருமுறை சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
சென்னை பெரியார் திடலில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, யாரெல்லாம் இந்துக்கள் என அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. அதாவது, மனுஸ்மிருதியில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்கிப் பேசினார்.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்துக்களை விபசாரி மகன் என ஆ.ராசா இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆ.ராசா மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடையடைப்பு போராட்டம், சிறை நிரப்புப் போராட்டம் என கடந்த 20 நாட்களாக இதனை வைத்து பாஜக மிகப்பெரிய அரசியல் செய்து வருகிறது.
ஆ.ராசா பேச்சுக்கு திமுக தலைவர்கள் ஆதரவாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினும் எந்த கருத்தையும் தெரிவிக்காததால், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அவரை திமுக கைவிட்டு விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின. இந்த நிலையில், காட்டமான அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஆனால், ஆ,ராசா பெயரோ, பாஜக பெயரோ, அண்ணாமலை பெயரோ இடம்பெறவில்லை.
இதனால், பாஜகவை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பயப்படுவதாக சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். உண்மையில் அப்படியல்ல. இதுகுறித்து திமுக உள்வட்டாரங்களிடம் விசாரித்தபோது, “திமுக vs அதிமுக என்பதுதான் தமிழகத்தின் நிலையாக உள்ளது. இதனை திமுக vs பாஜக என மாற்ற அக்கட்சி முயற்சித்து வருகிறது. இதற்கான திட்டமிடல்களுடன் அக்கட்சி காய் நகர்த்தி உள்ளே வரப் பார்க்கிறது. ஆனால், தமிழகத்திலோ நிலையோ வேறு; திமுக vs அதிமுக என்றுதான் இன்றைக்கும் உள்ளது. இந்த சூழலில் பாஜகவின் பெயரையோ அண்ணாமலையின் பெயரையோ பயன்படுத்தி அவர்களை வளர்த்து விடவோ, திமுகவின் நேரடி எதிரியாக பாஜகவை காட்டவோ ஸ்டாலின் விரும்பவில்லை. மற்றபடி நச்சு சக்திகள் என்று காட்டமாகவே அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.” என்றனர்.
கொள்கை பேசும் ஆ.ராசா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போன்றவர்கள் பக்கம் நிற்கிறேன் என்று ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கும் அவர்கள் ஸ்டாலின் பயப்படவில்லை பதுங்குகிறார் அதுவும் பாய்ச்சலுக்குத்தான் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.
முன்னதாக, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீதான சர்ச்சைகள் வந்தபோது கூட, அவரை அழைத்த ஸ்டாலின், இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம்; நம்முன் இருக்கும் மக்கள் நலப் பணிகள் ஏராளம் அதில் கவனம் செலுத்துங்கள். விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவே தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில், கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். நம்முடைய பயணம் நெடியது. நமக்குப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்து நம் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வோம். நச்சு சக்திகளுக்குத் தக்க பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் என்று இந்த முறையும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.