இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் – ராகுல்காந்தி

கோழிக்கோடு,

பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ தூரத்தை கடந்து 15-வது நாளில் (22-ந்தேதி) திருச்சூர் மாவட்டம் சாலைக்குடியில் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் 16-வது நாளாக தனது பாதயாத்திரையை தொடர்ந்தார்.

காலை 6.30 மணிக்கு திருச்சூர் பேராம்பிரா சந்திப்பில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. அங்கு தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு பாத யாத்திரை திருச்சூர் சுவராஜ் ரவுண்ட் ரோடு வடக்கும்நாதன் கோவில் தெற்கு வாயிலில் நிறைவடைந்தது. நேற்று 17-வது நாள் பாதயாத்திரை திருச்சூர் தோப்பு மைதானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

இந்த பாதயாத்திரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளான கலந்துகொண்டனர். அவர்களுடன் ராகுல் காந்தி உற்சாகமாக தனது பயணத்தை தொடர்ந்து காலை 10 மணி அளவில் பட்யாட்ரா பகுதியில் முடிந்தது. பின்னர் மாலை 4.30 மணி அளிவில் மீண்டும் வடக்கஞ்சேரி பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இதில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் கியாஸ் விலை உயர்வு குறித்த பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு சென்றனர். பாதயாத்திரையில் பங்கேற்ற சிறுமிகள் மற்றும் பெண்களிடம் நலம் விசாரித்தப்படி ராகுல் காந்தி நடந்து சென்றார்.

அப்போது சிறுமி ஒருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடமணிந்து பாதயாத்திரையில் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார். இதில் ராகுல்காந்தி, இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் உள்ளதாக தெரிவித்தார். மாலை 7 மணி அளவில் செருத்துருத்தி பகுதியில் பாதயாத்திரையை நிறைவு செய்தார். மேலும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் அங்கிருந்து பாதயாத்திரையை ராகுல்காந்தி மேற்கொள்வார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.