இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி கடற்றொழில் சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

மன்னார், ஜோசப் வாஸ் நகர் பிரதேசத்தில் இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக இருக்கும் காணியை குத்தகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடற்றொழில் சங்கத்திற்கு வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறித்த காணி உத்தியோகபூர்வமாக நேற்று (25) ஜோசப் வாஸ் நகர் கடற்றொழில் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தம் காரணமாக விடத்தல்தீவில் இருந்து 1990 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் தீவில் ஜோசப் நகர் எனும் இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

எனினும், குறித்த பகுதியில் குடியமர்த்தப்பட்டவர்கள் தமது ஜீவனோபாயமான கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு தேவையான இறங்கு துறை இல்லாத அவலம் தொடர்ந்து வந்தது.

இவ்விடயம் பாதிக்கப்பட்டவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அதுதொடர்பாக கரிசனை செலுத்திய கடற்றொழில் அமைச்சர், குறித்த பிரதேசத்தில் இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக இருக்கும் காணியை குத்தகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடற்றொழில் சங்கத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த காணி உத்தியோகபூர்வமாக  ஜோசப் வாஸ் நகர் கடற்றொழில் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.