தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கலாசார காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது சகோதரனின் உடலின் மீது தனது கூந்தலை வெட்டி எறிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இளம் பெண் ஒருவர்.
ஜாவத் ஹேதரி என்ற அந்த இளம் பெண்ணின் சகோதரர் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் ஜாவேத் ஹேதரி மற்றும் சில பெண்கள் திரண்டனர். அப்போது பெண்கள் அனைவரும் நினைவிடத்தில் ரோஜாப்பூக்களை வீசி ஒப்பாரிவைத்து துக்கத்தை வெளிப்படுத்தினர். ஜாவேத் மட்டும் ஒரு கத்தரிக்கோலை எடுத்து தனது கூந்தலை கத்தரித்து சகோதரன் நினைவிடத்தின் மீது வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஈரான் பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான மாஷி அலினேஜத் கூறுகையில், கூந்தலை வெட்டி எறிவதால் ஈரான் பெண்கள் தங்களின் சோகத்தையும், கோபத்தையும் அரசுக்கு தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
Javad Heydari’s sister, who is one of the victims of protests against the murder of #Mahsa_Amini, cuts her hair at her brother’s funeral.#IranRevolution #مهسا_امینیpic.twitter.com/6PJ21FECWg
— 1500tasvir_en (@1500tasvir_en) September 25, 2022
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியுள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஸ்த் எர்ஷாத் எனும் கலாசார காவலர்கள்: ஈரானில் 9 வயது சிறுமி முதல் முதிர்வயது பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.
அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் தான் அங்கு லட்சக்கணக்கான பெண்கள் துணிச்சல் மிகு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.