உலகநாயகனை சந்தித்த பிரிட்டன் எம்.பி – எதற்கு தெரியுமா?

கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். சட்டப்பேரவைத் தேர்தல்வரை அரசியலில் வீரியமாக செயல்பட்ட கமல் ஹாசன் சமீபகாலமாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். அப்படி அவர் நடித்த விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து அவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் அரசியல்வாதி கமல் கொஞ்ச காலம் ஆப்சென்ட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூழல் இப்படி இருக்க பிரிட்டனின் எம்.பி லார்ட் வேவர்லி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் ஹாசனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.

 

இதுகுறித்து கமல் ஹாசன் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், “ உலகளாவிய கலாசாரத்தை உலகெங்கும் பறைசாற்றுவதிலும் சக வாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கினைக் குறித்து இருவரும் விவாதித்தோம்.

சமீபகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், இலக்கியம், சினிமாவில் முதலீடு, தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு குறித்து பிரிட்டன் எம்.பி கூறுகையில், “கமல்ஹாசனை பொறுத்தவரை இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்து ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டிருப்பவர். மேலும், உலகில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர். 

உள்நாடு, வெளிநாடு என உலகெங்கும் உள்ள சிக்கல்களை எத்தகைய சூட்சுமத்தோடு அணுக வேண்டும் என்பது குறித்தும், அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.