விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் தனியார் மண்டபம் ஒன்றில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மணிவிழா நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான்; எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய தொல்.திருமாவளவன், “அக்டோபர் 2 காந்தியடிகள் பிறந்த நாள். அன்று ‘சமூக நல்லிணக்க பேரணி’ அறிவிப்பு செய்திருந்தோம். `இதற்கு முன் நாம் இந்தப் பேரணியை நடத்தியது இல்லையே..! இது அம்பேத்கர் கருத்துக்கு முரணானது இல்லையா..?’ என கேள்வி எழலாம். யாருக்கும் கேள்வி எழாவிட்டாலும் நான் தூண்டிவிடுகிறேன். காந்தியடிகளுடன் கருத்தியல் முரண் விசிக-வுக்கு இருந்தாலும், அவர் போற்றுதலுக்குரியவர்” என்றவர், காந்தியடிகளுடனான முரண்பாடுகள் பற்றி விரிவாகப் பேசினார்.
தொடர்ந்து பேசியவர், ” `காந்தியடிகளைப் பற்றி உங்களுக்கு என்ன?’ என முகநூல் வாயிலாக விமர்சிப்பவர்களுக்கு நம்முடைய அரசியலைப் புரிந்து கொள்ள இன்னும் 10 ஆண்டுக்காலம் ஆகும். அவர்கள் அந்த அளவுக்கு அரசியல் முதிர்ச்சியுடையவர்கள் அல்ல, கருத்தியல் பார்வை உடையவர்கள் அல்ல. ‘தி.மு.க-வுடன் கூட்டணி ஏன்? தனித்து நில்லுங்களேன்’ என்பவர்கள் பால பாடத்தில் இருக்கிறார்கள். நெடுந்தூரம் பயணித்தவர்களுக்குத்தான் தெரியும் அந்தக் கூட்டணி ஏன் என்று. அக்டோபர் 2-ம் நாளை பேரணிக்கு தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருக்கிறது. இனி, ஹெச்.ராஜாவை `பிராமண இந்து ஹெச்.ராஜா’ என்றுதான் பேசவேண்டும்.
பிராமண, சத்ரிய, வைசிய, சூத்திர இந்து என இந்துக்களில் நான்கு வகை உண்டு என அவர்கள்தான் சொல்லிக்கொள்கிறார்கள். இந்த 4 வர்ணத்தினரும் சமமா? என்ற கேள்வியே எங்களுக்கு எழாது. ஏனென்றால், நாங்கள் இந்துக்களே அல்ல. இந்துக்களே அல்ல என்று நாங்கள் சொல்லவில்லை, வர்ணாசிரமத்தின்படி நீங்கள் தான் சொல்கிறீர்கள். நீங்கள் செல்லும் நான்கு வர்ணத்தில் நாங்கள் இல்லை. நாங்கள் ஆண்ட பரம்பரை என்றெல்லாம் சொல்லிக்கொள்ள மாட்டோம். நாங்கள் புத்தர், வள்ளுவர், அம்பேத்கரின் ஞான பரம்பரை. பிராமண இந்து ராஜா சொல்கிறார்… `வி.சி.க-வை தடை செய்யுங்கள்’ என்று. தடை செய்யுங்கள், அதை வரவேற்கிறோம். ஆர்.எஸ்.எஸ் என்பதைவிட ஒரு பாசிச இயக்கம் இந்தியாவில் வேறு உண்டா..! நாங்கள், பார்ப்பன சமூகத்திலும் பாகுபாடு இருக்கக்கூடாது, அவர்களும் சமத்துவம் பெறவேண்டும் எனப் போராடுபவர்கள். இந்த மண்ணின் பூர்வகுடி நான். இந்த மண்ணின் மைந்தன் நான்.
பூணூல் போட்டால் பெருமை என நினைக்கிறார்கள். பூணூல் போடும் வழக்கம் எங்கிருந்து வந்தது தெரியுமா? விவசாயம் அல்லாத, பிற தொழில் செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக தொடங்கப்பட்ட பழக்க வழக்கங்களுள் ஒன்றுதான் பூணூல் போடுவது. அதேபோல் ஆரியம் என்ற சொல்லுக்கு நேரெதிராக பண்டிதர் அயோத்திதாசரால் கொண்டுவரப்பட்டதுதான் ‘திராவிடம்’ எனும் சொல். ஹெச்.ராஜா-வின் கனவிலெல்லாம் சிறுத்தைதான் வரும் போல. சிலர் சிம்ம சொப்பனம் என்பார்கள்… ஆனால், அவர்களுக்கெல்லாம் சிறுத்தை சொப்பனம்தான். அவர் எங்கு சென்று பேட்டிக் கொடுத்தாலும், `திருமாவளவன் என்னும் தீய சக்தி’ என அருமையான ஒரு சான்றிதழ் அளிப்பார். நீங்கள் என்னை ‘தீய சக்தி’ என்று சொன்னால்தான், நான் சரியாக இருக்கிறேன் என்று பொருள். நீங்க ‘நல்ல சக்தி’ என்றால்… நான் சனாதன சங்கியாக மாறிவிட்டேன் என்று பொருள். நான் சனாதன சங்கி அல்ல.
பிராமண இந்துவாக இருக்கும் ஹெச்.ராஜா, திருமாவளவனை பார்த்து தூய சக்தி என்று சொல்ல முடியாது. தீய சக்தி என்றுதான் சொல்ல முடியும். அதனால்தான் அவர் சொல்வதைக் கேட்டு நான் சிரித்துக்கொண்டே சென்றுவிடுவேன். தலித்களையும், பழங்குடிகளையும், அம்பேத்கரையும், அவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தையும் அவர்கள் ஒருபோதும் நேரடியாக பகைத்துக்கொள்ள மாட்டார்கள். இம்மக்களை பகைத்துக் கொண்டால் நாம் தனிமைப்பட்டுப்போவோம், அதனால் அவர்களின் மதமாற்றம் அதிகரிக்கும். எனவே தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும்கூட, `வா… உனக்கு அமைச்சர் பதவி தருகிறேன்’ என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி, உடன் வைத்துக்கொள்கிறார்கள். மக்களின்மீது அக்கறை இல்லாதவர்களும் பதவிக்கு ஆசைப்பட்டு சென்றுவிடுகிறார்கள்.
தலித் தலைவர்களை, தலித் இயக்கங்களை இப்படித்தான் அவர்கள் ஸ்வாகா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே… அவர்களை நேரடியாக எதிர்க்கின்ற, அவர்களின் முகத்திரையை கிழிக்கின்ற கட்சி வி.சி.க. காரணம் அம்பேத்கரின் கொள்கையை உள்வாங்கிய இயக்கம் வி.சி.க. இப்போது ஆர்.என்.ரவி என்ற ஆர்.எஸ்.எஸ் ரவியே பேசுகின்றார் சனாதனத்தை பற்றி. அவர் நன்கு பயிற்சிப் பெற்றவர். இப்போது தமிழ்நாட்டை குறிவைத்துவிட்டார்கள். தி.மு.க-வை இலக்காக வைத்து காய் நகர்த்துகிறார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை இங்கு கட்டமைக்கப் பார்க்கிறார்கள். ஏன் பி.ஜே.பி பேரணி நடத்தாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துகிறது. 1, 2 இடங்களில் அல்லாமல், 50 இடங்களில் ஏன் பேரணி நடத்துகிறார்கள். அக்டோபர் 3-ம் தேதி பேரணி நடத்த வேண்டியதுதானே… ஏன் 2-ம் தேதி? அனைத்திலும் அரசியல் இருக்கிறது.
வி.சி.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இடையில்கூட சில இடைவெளிகள் இருக்கலாம். ஆனால், சனாதன சங்கிகள் தமிழகத்தை ஆக்கிரமிக்க விடாமல் ஒரு தடுப்பு அரணாக இருந்தது திராவிட இயக்கங்கள். இதில் இன்னொரு நன்மை என்னவென்றால், எம்.ஜி.ஆர் தனி கட்சி ஆரம்பித்ததுதான்.
அப்படி ஆரம்பிக்கவில்லை என்றால், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க-வில் ஏதோ ஒன்றுதான் இங்கு மாற்று கட்சியாக இருந்திருக்கும். மாநில அளவில் பாஜக வளர்கிறது என்றால், ஆர்.எஸ்.எஸ் வளர்கிறது என்று பொருள். ஆர்.எஸ்.எஸ் வளர்கிறது என்றால் வர்ணாசிரமம் வளரும், சாதிக்கொடுமைகள் தலைவிரித்தாடும்” என்றார் காட்டமாக.