மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் மைதானமாக இருப்பதால் தவறான தகவல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வந்த பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள், 250 ஐசியூ படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டுமானப் பூர்வாங்கப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளதாக கூறியிருந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் துவங்காத நிலையில் நட்டாவின் அறிவிப்பு தென்மாவட்ட மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், மதுரை எஸ்பி மற்றும் ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு இ-மெயில் மற்றும் பதிவுத்தபால் மூலம் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. பணிகள் துவங்கப்படாத நிலையில் நட்டாவின் அறிவிப்பு அதிர்ச்சியைத் தந்தது. இதையடுத்து நான் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தேன். சுற்றுச்சுவர் மட்டும் தான் உள்ளது. இன்னும் கட்டுமானப் பணிகள் துவங்கவே இல்லை. இடம் முழுக்க மைதானமாகத்தான் உள்ளது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாக தகவல் தெரிவிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.