எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்…ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் அர்ஜூன் சம்பத்!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), மாநில போலீசார் ஆகியோர் இணைந்து கடந்த 22 ஆம் தேதி ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில பிஎஃப்ஐ நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்த அதிரடி சோதனை நடைபெற்ற அன்றிரவே கோவை காந்திபுரம் வி கே கே மேனன் ரோட்டில் அமைந்துள்ள பாஜகவின் மாவட்ட அலுவலகத்தின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றார்.

இதன் தொடர்ச்சியாக ஒப்பணக்கார வீதி, சித்தாபுதூர் என கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் இந்த அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களின் வீடுகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கோவையில் மட்டுமின்றி திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தப்பட்டுள்ளன.

பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ நடத்திய மாஸ் ரெய்டுக்கு பதிலடியாக இந்த குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதாகவும், ரெய்டு, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை பயன்படுத்தி பாஜக அரசியல் செய்து வருவதாகவும் இருவேறு கருத்துகள், விமர்சனங்கள் தமிழக அரசியல் அரங்கில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொள்ளாச்சியில் உள்ள பாஜக அமைப்பு சாரா பிரிவின் நிர்வாகி பொன்ராஜ் வீட்டுக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பொன்ராஜின் காரை பார்வையிட்டு, நடந்த சம்பவம் குறித்து அவரிடம் கேட்டறிந்தார்.

பிறகு அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது:

தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சோதனை என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் இந்த சோதனையின் எதிரொலியாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை ஆளும் திமுக அரசு எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ அமைப்புடன் ரகசிய உறவு வைத்துள்ளது. இந்த உறவை துண்டித்துக் கொண்டு, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போவதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்தான் முக்கிய காரணம். இந்த வன்முறை சம்பவங்களை அவர் இதுவரை கண்டிக்கவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.