சியோல்,
கிழக்கு ஆசிய நாடான வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
எனவே வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டுமென அதன் அண்டை நாடான தென்கொரியாவும், தென்கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் முயற்சித்து வருகின்றன.
பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் இதை எட்ட வடகொரியாவுக்கு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் வடகொரியாவோ தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகள் திரும்பப்பெறப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என கூறிவருகிறது.
அதோடு நிற்காமல் பொருளாதார தடைகளை திரும்ப பெற அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா முடுக்கி விட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரையில் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை உள்பட 30-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது.
இதனிடையே வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தென்கொரியா கடற்படையுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்கா, அணுசக்தி திறன் கொண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன்’ என்ற போர்க்கப்பலை சமீபத்தில் தென்கொரியாவுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் அமெரிக்க போர்க்கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா நேற்று குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதித்தது. இந்த தகவலை தென்கொரியா ராணுவம் தெரிவித்தது.
இதுப்பற்றி தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியாவின் மேற்கு பகுதியில் டேச்சன் நகரில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை அந்த நாட்டின் கிழக்கு கடற்கரை நோக்கி பறந்து, கடலில் விழுந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு வருகிற 29-ந்தேதி தென்கொரியாவுக்கு செல்லவுள்ள நிலையில், வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
அதே சமயம் கமலா ஹாரிசின் இந்த பயணத்தின்போது வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.