ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக புதிய அரசியல் கட்சியை இன்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவிக்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்பட்டனர்.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் இந்த தலைவர்களின் கருத்தை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியது. இதனால் பல மாநிலங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சிகளில் இருந்து வெளியேறினர். மேலும் பல தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அப்போதும் கூட காங்கிரஸ் மேலிடம் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகவில்லை.
அண்மையில் 5 மாநில சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த போது சில மாதங்கள் மட்டும் சீரமைப்பு குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்தது. பின்னர் அதனையும் கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் அடுத்தடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறினர்.
காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம்நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்திருந்தார். தமது அரசியல் கட்சியின் பெயரை ஜம்மு காஷ்மீர் மக்களே முடிவு செய்வார்கள் எனவும் குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமது கட்சியின் பெயரை குலாம்நபி ஆசாத் அறிவிக்க உள்ளார்.