காங், தலைவர் பதவியா, முதல்வர் பதவியா? – அசோக் கெலாட்டை அலைக்கழிக்கும் ராஜஸ்தான் அரசியல்!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகி வந்தன. சமீபத்தில் டெல்லி சென்ற சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது, தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூருக்கு சோனியா அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. சசி தரூர் தரப்பில் அவரின் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான மதுசூதன் மிஸ்திரியிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கான 5 செட் விண்ணப்பங்களை வாங்கியுள்ளதை அடுத்து, இந்த தேர்தலில் முதலாவது நபராக சசி தரூர் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இதற்கு முன்னதாக, தலைவர் பதவிக்கு ராகுலை போட்டியிட வைக்க கடைசிக் கட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தனது முடிவில் உறுதியாக உள்ளதாக ராகுலும் கூறிவிட்டார்.

சோனியா காந்தி

இந்த நிலையில் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியிருந்தார். அவரும் விரைவில் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அப்படி அசோக் கெலாட் கட்சித் தலைவராகத் தேர்வானாலும், முதல்வர் பதவியிலும் தொடர விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததாகத் தகவல்கள் வரவே, அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்வானால் ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக வரும் செய்திகளையடுத்து, கெலாட் ஆதரவாளர்கள் என கருதப்படும் சுமார் 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளனர். சச்சின் பைலட்டை முதல்வராக்கக் கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் முதல்வர் அசோக் கெலாட்டை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கெலாட், `எம்.எல்.ஏ-க்கள் கோபமாக இருக்கின்றனர். எனது கைகளில் எதுவும் இல்லை’ என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால், கேசி வேணுகோபால் `இது போன்ற உரையாடல்கள் ஏதும் நடைபெறவில்லை’ என்று மறுத்துள்ளார். `விரைவில் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்’ என்றும் கூறியுள்ளார்.

சச்சின் பைலட், அசோக் கெலாட்

கெலட்டை பொறுத்தவரை இரட்டைத் தலைமை விவகாரத்தை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸ் தலைவர் பதவி பார்ட் டைமாக பார்க்கும் வேலை அல்ல கெலாட்டுக்கு முதல்வர் பதவி முக்கியம் என்றால் அதில் மட்டுமே அவர் தொடரட்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்துள்ளதால் கெலட்டுக்கான நெருக்கடி முற்றியுள்ளது. ஆனால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பதாக இல்லை கெலாட். 2020-ல் வெறும் 17 எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்துக் கொண்டு தனது ஆட்சியை கவிழ்க்க முயன்ற சச்சின் பைலட்டிற்கு முதல்வர் பதவியை தாரைவார்க்க கெலாட் தயாராக இல்லை. சச்சின் பைலட் ராகுலுக்கு நெருக்கமானவர் என்பதாலேயே அவர் துணிச்சலுடன் கெலாட்டை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், காங்கிரஸுக்கு 107 எம்எல்ஏ-க்களும், 13 சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது. இந்த சுயேச்சைகளில் பெரும்பாலானவர்கள் கெலாட்டை ஆதரிக்கும் முன்னாள் காங்கிரஸ்காரர்கள்.

ஒரு நபருக்கு ஒரு பொறுப்பு’ (one post for one person) என்ற கட்சியின் கொள்கையை எடுத்துரைக்கக் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை அவரது வீட்டில் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அக்டோபர் 19- ம் தேதிக்கு முன்னதாக ராஜஸ்தான் முதல்வர் பதவி குறித்து எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக கட்சி மேலிடத்திலிருந்து வெளியாகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவருக்கான தேர்வில் முன்னணியில் அசோக் கெலாட் இருந்தாலும் இரண்டு தலைமை விவகாரத்தில் அவர் மூழ்கியிருக்க, சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பதவிக்கான வேட்புமனுக்களைப் பெற்று அடுத்தகட்ட நகர்வு நோக்கி முன்னேறியுள்ளார்.

சச்சின் பைலட், ராகுல் காந்தி, அசோக் கெலாட்

“பாரத் ஜோடோ’ என்று ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சூழலில் கோவா காங்கிரஸில் பிளவு, ராஜஸ்தான் காங்கிரஸில் சலசலப்பு என்ற சூழல் பாஜகவினர் விமர்சிக்கத் தோதான களமாக மாறியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறட்டும். கட்சிக்குள் ஒற்றுமை ஓங்கட்டும்’ என்கிற பார்வையினை முன் வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.