கவுகாத்தி: வனவிலங்குகள் பாதுப்பு சட்டத்தை மீறி காசிரங்கா தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் சென்றதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்டோருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அசாம். இந்த மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியை ஒட்டிய பகுதியில் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது.
சுமார் ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தேசிய பூங்காவில் புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இரவு நேரத்தில்
இந்திய வகை காண்டா மிருகங்களின் இல்லம் என்றும் இந்த தேசிய பூங்கா அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், காசிரங்கா தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா ஆகியோர் சுற்றுலா சென்று வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு தேசிய பூங்காவிற்குள் செல்லக்கூடாது என்றும் ஆனால் இதை மீறி மூன்று பேரும் இரவு நேரத்தில் சென்று வந்தது சட்ட விரோதம் என்றும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வார்டன் அனுமதி அளிக்கலாம்
ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, அமைச்சர் பருவா ஆகியோர் அமர்ந்து இருக்கும் எஸ்.யூ.வி ரக காரை சத்குரு ஓட்டிச்செல்வது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஆனால், இதில் விதி மீறல் எதுவும் நடைபெறவில்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”வனவிலங்குகள் சட்டத்தின் படி, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இரவு நேரத்தில் கூட சென்று வர பூங்காவின் வார்டன் அனுமதி அளிக்கலாம்.
விதிமீறல் இல்லை
எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை. இரவு நேரத்தில் செல்லக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. நடப்பு சீசனுக்காக முறைப்படி நேற்று பூங்காவை நாங்கள் திறந்தோம். இப்போது சத்குருவும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் வந்திருக்கிறார்கள். இவர்களை பின் தொடர்பவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். என்வே இந்த முறை சுற்றுலா பயணிகள் வருகை சிறப்பாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
போலீசில் புகார்
இரவு நேரத்தில் விதிகளை மீறி சஃபாரி சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் சோனேஸ்வர் நரா மற்றும் பிரபின் பேகு ஆகியோர் கோலகட் மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி மாலை 4 மணிக்கு மேல் பூங்காவிற்குள் செல்ல அனுமதி கிடையாது என்றும் இதை மீறும் வகையில் சத்குரு, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் நடந்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளோம்.
கைது செய்ய வேண்டும்
சட்டம் அனைவருக்கும் சமம் தான். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் மட்டும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை எப்படி மீற முடியும். இந்த விதிமீறலை சகித்துக்கொள்ள முடியாது. எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் சோனேஸ்வர் நரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.