மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் நடைபெறும் ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சினிமா மற்றும் டிவி நடிகர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ஸ்ரீ அம்பிகை தசரா குழு சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கலை நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்க கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
அதாவது, தசரா விழாவின்போது ஊருக்குள் உள்ளே, வெளியே ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். விழாவின்போது நடைபெறும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும். நிகழ்ச்சியின் போது ஆபாச நடனங்கள், தகாத வார்த்தைகள் உபயோகித்தால் நிகழ்ச்சியை போலீஸ் நிறுத்தலாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்வதற்கான கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். நிகழ்ச்சியின் கட்டுப்பாடுகளை மீறி ஆபாச நடனங்கள் இடம்பெற்றால் சினிமா நடிகர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.