குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – 2 ஆண்டுக்குப் பிறகு அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா விமர்சையாக நடைபெறும். இங்குள்ள அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (26-ம் தேதி, திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்குக் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

குலசை கொடியேற்றம்

விழாவையொட்டித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பல்வேறு நாள்களாக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாகப் பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோயிலில் செலுத்துகின்றனர்.

1-ம் நாள் விழாவில் துர்கை அம்மன் அலங்காரத்திலும், 2-ம் நாள் விழாவில் விஸ்வகாமேஸ்வரர் அலங்காரத்திலும், 3-ம் நாள் விழாவில் பார்வதி அம்பிகை அலங்காரத்திலும், 4-ம் நாள் விழாவில் பால சுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-ம் நாள் விழாவில் நவநீதகிருஷ்ணர் அலங்காரத்திலும் 6-ம் நாள் விழாவில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும், 7-ம் நாள் விழாவில் ஆனந்த நடராஜர் அலங்காரத்திலும், 8-ம் நாள் விழாவில் கஜலெட்சுமி அலங்காரத்திலும், 9-ம் நாள் விழாவில் கலைமகள் அலங்காரத்திலும் எழுந்தருளி ரத வீதிகளில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.

10-ம் நாள் விழாவான வரும் அக்டோபர் 5-ம் தேதி, இரவு 11 மணிக்கு மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு மகிஷாசுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.

முத்தாரம்மன் கோயில் கொடியேற்றம்

திருவிழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தசரா திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்தாண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேகரப்பட்டினத்தில் திரும்பும் திசையெங்கும் செவ்வாடை பக்தர்களும், ‘ஓம் காளி, ஜெய்காளி…’ எனப் பக்தர்களின் காளிகோஷமும் விண்ணை முட்டுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.