ஜம்மு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தனது கட்சிக்கு ‘ஜனநாயக சுதந்திர கட்சி’ என பெயரிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது புதிய கட்சி வெளி தாக்கங்களால் பாதிக்கப்படாத சுதந்திரமான மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சியாக இயங்கும் என தெரிவித்துள்ளார். தனது கட்சியில் இணைவதற்கு வயது வரம்பு இல்லை என தெரிவித்த குலாம் நபி ஆசாத், இளைஞர்களும் மூத்தவர்களும் இணைந்த கட்சியாக இது இருக்கும் என்றார்.
கட்சிக்குப் பெயர் வைக்க 1,500-க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறிய குலாம் நபி ஆசாத், உருது மற்றும் சமஸ்கிருத பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஜனநாயகம், அமைதி, சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தக் கூடியதாக கட்சியின் பெயர் இருக்க வேண்டும் என்று தானும், கட்சியின் மூத்த தலைவர்களும் விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதே தற்போது தங்கள் முன்னுரிமைப் பணி என்றார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால் கட்சியின் பெயரை விரைவாக பதிவு செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது கட்சிக்கு நீலம், வெள்ளை, வெளிர்மஞ்சள் வண்ணத்திலான கொடியை அறிமுகப்படுத்திய குலாம் நபி ஆசாத், கடலின் ஆழத்தைப் போன்றும் வானின் உயரத்தைப் போன்றும் கட்சியில் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, கற்பனை ஆகியவை இருக்க வேண்டும் என்பதை நீல நிறமும், அமைதியை வெள்ளை நிறமும், வேற்றுமையில் ஒற்றுமையை வெளிர் மஞ்சள் நிறமும் குறிப்பதாக விளக்கம் அளித்தார்.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், சரியாக ஒரு மாதத்தில் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் இன்று அறிமுகப்படுத்தி உள்ளார். காங்கிரசில் இருந்து விலகிய பின் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவது, நில உரிமையை மீட்பது, வேலைவாய்ப்பை பெருக்குவது ஆகியவற்றுக்காக தனது புதிய கட்சி பாடுபடும் என உறுதி அளித்தார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருந்த குலாம் நபி ஆசாத், அதனை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுபோன்ற பொய்யான வாக்குறுதியை அளிக்க விரும்பவில்லை என்றும், அது மீண்டும் அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.