கருவுற்ற தாய் கேரட் உண்ணும்போது, வயிற்றில் உள்ள குழந்தை முகம் புன்னகைப்பதும், கீரையை தாய் எடுத்துக்கொள்ளும்போது சிசு முகம் சுளிப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தாய் விரும்பி உண்பதையே, பிற்காலத்தில் அந்தக் குழந்தையும் விரும்பி உட்கொள்ளும் வாய்ப்பு அதிகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேஜ் (Sage) இதழில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவானது ஆரம்பக்காலத்திலேயே சுவைகளை உணரவும், பிரித்துணரவும் திறன் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்காக இங்கிலாந்தை சேர்ந்த 100 ஆரோக்கியமான கர்ப்பிணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 35 பேரை கீரையின் சுவை கொண்ட மாத்திரையை உட்கொள்ள செய்துள்ளனர். அடுத்த 35 பேருக்கு கேரட்டின் சுவை கொண்ட மாத்திரையை கொடுத்தவர்கள், மீதமுள்ள 30 பேருக்கு எந்த மாத்திரைகளையும் உட்கொள்ளக் கொடுக்கவில்லை. மாத்திரைகளை உட்கொண்டு சுமார் 20 நிமிடத்திற்கு பின், ஆராய்ச்சியாளர்கள் 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளை கண்காணித்துள்ளனர்.
அதில், கீரையை உட்கொண்ட தாய்மார்களின் வயிற்றில் இருந்த கருவானது, முகத்தை வருத்தமாக வைத்திருந்ததாம். அதே சமயம் கேரட்டின் வாசனையைக் கொண்ட மாத்திரைகளை உட்கொண்ட தாய்மார்களின் வயிற்றில் இருந்த குழந்தையானது, புன்னகைத்துக் கொண்டிருந்ததாம். ஆனால், அதே கருக்களை முதிர்ச்சியடைந்த பின்னர் ஸ்கேன் செய்தபோது, அவற்றின் முகபாவனைகள் குழப்பமூட்டுவதாக அமைந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வு அறிக்கையை தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்ளும் உணவுகளின் சுவையைப் பொறுத்தே, அந்தக் குழந்தை பிறந்த பிறகு உணவுக்கான அதன் தேர்வும் அமைகிறது. ஒருவேளை, கருவுற்றிருக்கும் தாய் கீரை உணவுகளை உட்கொண்டால், பிற்காலத்தில் அந்த குழந்தையும் கீரை உணவுகளை விரும்பி உட்கொள்ளும் வாய்ப்பு உள்ளது” என்றனர்.
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியான உணவுகளை தாய் உட்கொண்டால், குழந்தையும் வளரும்போது ஆரோக்கியமான உணவுகளையே விரும்பி உட்கொள்ளும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஒரு தாய் கருவுற்றிருக்கும்போது, வயிற்றில் இருக்கும் கருவானது உணர்ச்சிகள், வாசனைகள் ஆகியவற்றை பிரித்துணரும் திறனை ஆரம்பக்காலத்திலயே பெறுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறினர்.