கேரளா: சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பினராயி விஜயன் அரசு தவறி விட்டது – ஜே.பி.நட்டா கடும் தாக்கு

கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயத்தில் அவாஸ் யோஜனா திட்ட நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் அவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா மற்றும் கிசான் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து உள்ளனர்.

கேரளாவில் ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தவறி விட்டது.

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. வாக்குவாதம் மற்றும் விவாதங்களுக்கு மட்டுமே இடம் உண்டு. ஆனால் கேரளாவில் பா.ஜனதா கட்சி தொண்டர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். உடல் ரீதியான தாக்குதல்கள், வன்முறைகள் தொடர்வதை நாம் காண்கிறோம்.

அத்துடன் முதல்-மந்திரி அலுவலகம் ஊழலுக்கு அப்பாற்பட்டது அல்ல. அதற்கு உதாரணம் தான் கேரளாவில் பரபரப்பாக உள்ள தங்க மோசடி ஆகும். மேலும் மாநிலம் கடன் வலையில் சிக்கும் நிலைக்கு இந்த அரசாங்கத்தின் செயல்பாடு உள்ளது. இதன் கடன்கள் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலம் வளர்ச்சியடையவும், உள்கட்டமைப்பு வசதிகள் பெருகவும், ஊழலற்றதாகவும், பொது மக்கள் அதிகாரம் பெறவும், கேரள மக்கள் விரும்பினால், பா.ஜனதாவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசும் போது, “20 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாநிலத்திலும், அதைத்தொடர்ந்து மத்தியிலும் அரசியல் தலைவராக இருந்து பிரதமர் மோடி உலக சாதனை படைத்துள்ளார்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.