புதுடெல்லி: அலுவல் விவரங்களை அளித்ததை தொடர்ந்து, பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை நாளை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தனது கட்சி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சிப்பதாக சமீபத்தில் அவர் குற்றம்சாட்டினார். மேலும், சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை கடந்த 22ம் தேதி கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் போவதாக முதல்வர் மான் அறிவித்தார். இதற்கு முதலில் அனுமதி அளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தார். இதற்கு மான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், நாளை மீண்டும் ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவதற்கு, மான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பேரவையில் எடுத்துக் கொள்ளப்படும் அலுவல் விவரங்களை அளித்தால்தான் அனுமதி தரப்படும் என ஆளுநர் தெரிவித்தார். இதற்கு முதல்வர் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ‘கடந்த 75 ஆண்டு சுதந்திர வரலாற்றில் எந்த ஆளுநரும் இதுபோல் கேட்டதில்லை’ என்று கண்டித்தார். இதனால், இருதரப்பு மோதல் அதிகமானது. இந்நிலையில், ஆளுநரின் உத்தரவுக்கு பணிந்த முதல்வர் மான், நாளைய பேரவை கூட்டத்தில் விவசாய நிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது, ஜிஎஸ்டி வரி, மின்சார விநியோகம் ஆகிய பிரச்னைகளை விவாதிக்கப் போவதாக கடிதம் அனுப்யுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் புரோகித், பேரவை சிறப்பு கூட்டத்தை நாளை கூட்ட அனுமதி அளித்துள்ளார். இதன்மூலம் இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.