சென்னை: சாதியின் பெயரில் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊ.ப.சௌந்திரபாண்டியன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாநாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”சாதியால் ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து சாதியும் முன்னேற வேண்டும் என்பதே நோக்கம். ஒவ்பொரு சாதிக்கும் ஒரு அடையாளம் உண்டு. ஆனால் சாதி பெயரில் இருக்கும் அடக்குமுறையை ஏற்று கொள்ள முடியாது.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. அனைத்து சமுதாயமும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கங்களை இணைக்கும் விதமாக நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் 21 உயிர்கள் இழந்தோம். அதன் பலனாய் 108 பேருக்கு இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு கிடைத்தது.
நாங்கள் காமராசர் ஆட்சியை கொண்டு வருவோம் என தற்பொழுது உள்ள கட்சிகள் கூறலாம். ஆனால், காமராசரை போல் யாராலும் ஆட்சி செய்ய முடியாது. காமராசர் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் தலைவர் இல்லை. அவர் இந்தியாவுக்கு தலைவர். காமராசர் கல்விக்கு வித்திட்டவர். தமிழகத்தில் மீண்டும் காமராசர் ஆட்சியை கொண்டு வருவோம்” என்றார். இதையடுத்து ஊ.ப.சௌந்திரபாண்டியன் தபால் தலை வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.