சாதி ரீதியாக கொடுமை! கலெக்டர் ஆபீசுக்கு பெட்ரோல் பாட்டிலுடன் சென்ற முதியவர்!

Tamil Nadu News: உதகையில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் இன்று வழக்கம் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது எராளமான பொதுமக்கள் மனுக்களுடன் வந்தனர். அதில் 75 வயதுடைய முதியவர் ஒருவர் பையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். சந்தேகமடைந்த போலிசார் அவரது பையை சோதனை செய்த போது பெட்ரோல் பாட்டில் இருப்பதை கண்டு பிடித்ததுடன் அதனை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்பொழுது அவர், கோத்தகிரி அருகே உள்ள கடசோலை பகுதியில் வசித்து வருவதாகவும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கடசோலை அரசு பள்ளியில் நடைபெள்ள சுதந்திர தின விழாவில் தலைமை ஆசிரியரை தவிர மற்ற ஆசிரியர்கள் வராதது குறித்து கேள்வி எழுப்பிய போது, அப்பகுதி வார்டு கவுன்சிலர் உட்பட 3 பேர் தாக்கியதாகவும் அது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தனது ஆதங்கத்தை கூறியுள்ளார். மேலும் சாதி ரீதியாக தன்னை திட்டியதாகவும் அந்த முதியவர் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாகவும் தனக்கு தீர்வு கிடைக்கும் என எண்ணியதாகவும், ஒருவேளை தனக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதற்காக பெட்ரோலுடன் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதுபோன்ற அசம்பாவிதங்களை  தடுக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில், பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன்  முதியவர் வந்தததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.