தன்சானியா: ஆப்பிரிக்காவில் சிங்கம் போல முகமூடி அணிந்து சிங்கங்களிடமே சென்று ‘பிராங்க்’ (prank) செய்த யூடியூபர் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜப்பானை சேர்ந்தவர் ஜைரோ (28). டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஜைரோவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக பல ஆண்டுகள் கடினமாக முயற்சித்தார். ஆனால் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் யூடியூப் சேனலை ஜைரோ தொடங்கினார். அதில் மக்களை ‘பிராங்க்’ செய்து வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார். அவர் செய்யும் ‘பிராங்க்’ மக்களை கவரவே, அவரது யூடியூப் சேனல் பிரபலம் அடைந்தது.
சிங்கத்திடம் ‘பிராங்க்’
இந்நிலையில், மக்களை அதிக அளவில் ‘பிராங்க்’ செய்துவிட்டதால் இனி பார்வையாளர்களை கவர, புதுவிதமான ‘பிராங்க்’ வீடியோக்களை செய்ய முடிவு செய்தார் ஜைரோ. இதற்காக பல ஐடியாக்களை அவரும், அவரது நண்பர்களும் யோசித்து பார்த்தனர். ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. அப்போது அவரது நண்பர்கள், மனிதர்களிடம் செய்வதை போல மிருகங்களிடம் ‘பிராங்க்’ செய்யலாம் என ஐடியா கொடுத்தனர். ஜைரோவுக்கும் இந்த யோசனை பிடித்து போகவே, எந்த மிருகத்திடம் ‘பிராங்க்’ செய்வது என ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில், சிங்கத்திடம் ‘பிராங்க்’ செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆப்பிரிக்கா சிங்கங்கள்..
இதற்காக, ஜப்பானில் உள்ள மிருகக்காட்சி சாலைகளில் ஜைரோவும், அவரது நண்பர்களும் அனுமதி கேட்டு பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆப்பிரிக்காவில் உள்ள தன்சானியா நாட்டில் இருக்கும் மிருகக்காட்சி சாலையில் இவர்கள் ‘பிராங்க்’ செய்ய அனுமதி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் அங்கு சென்றனர். மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையான அங்கு 50-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பராமரிக்கப்படுகின்றன.
‘சிங்கம் போல கெத்தாக..’
இதன் தொடர்ச்சியாக, சிங்கங்கள் இருக்கும் பகுதிக்கு ஜைரோ சென்றார். அவருக்கு பிரத்யேகமாக சிங்கம் போன்ற முகமூடியும், உடையும் அணிவிக்கப்பட்டது. பின்னர், சிங்கம் இருக்கும் இடத்துக்குள் கெத்தாக எகிறி குதித்தார் ஜைரோ. முதலில் 4 கால்களுடன் நடந்து சென்ற அவரை, மற்ற சிங்கங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் சிங்கங்களுக்கு அருகே சென்று அவர் சில குறும்புகளையும் செய்தார். பிறகு, அவர் மெதுவாக எழுந்து இரண்டு கால்களில் நடக்க தொடங்கினார். அவ்வளவுதான் தாமதம். அங்கிருந்த 8-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் அவரை உடனே சூழ்ந்து கொண்டன.
துரத்தி துரத்தி தாக்குதல்..
இதைய பார்த்து பயந்து போன ஜைரோ, அங்கும் இங்கும் ஓடினார். ஆனால் அந்த சிங்கங்கள் அவரை விடவில்லை. சில நிமிடங்களிலேயே சிங்கங்கள் அவரை தாக்க தொடங்கின. இதை பார்த்த அவரது நண்பர்கள் வெளியில் இருந்து பயத்தில் அலறினர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஜைரோ, அங்கிருந்து ஓடிச் சென்று அந்தப் பகுதியில் இருந்து வெளியேறினார். இன்னும் ஒரு சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் கூட அவரது உயிர் போயிருக்கும் என அந்த மிருகக்காட்சி சாலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இனி பிராங்கா – நோ.. நோ..
இந்த ஒன்றரை நிமிட தாக்குதல்களிலேயே ஜைரோவின் கால், கை, முதுகு என ஆகிய இடங்களில் ரத்தம் கொட்டியது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஒரு வாரம் சிகிச்சைக்கு பிறகு நண்பர்களுடன் ஜப்பான் திரும்பினார் ஜைரோ. இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் விலங்குகளிடம் பிராங்க் செய்யப் போவது இல்லை என ஜைரோ அறிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.