புதுடில்லி: சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் லட்சியங்களைப் பின்பற்றி, அவர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
ஒவ்வொரு மாதமும் அகில இந்திய வானொலியில் `மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடம் உரையாடுகிறார் பிரதமர்நரேந்திர மோடி. இதன்படி, நேற்றைய `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த சில நாட்களில், நம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவிஷயம் சிவிங்கி புலிகள். நமீபியாவிலிருந்து 8 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு திரும்பி வந்தது குறித்து 130 கோடி இந்திய மக்களும் பெருமிதம் கொள்கின்றனர். இந்தியதேசம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல் இதுதான்.
மத்தியப் பிரதேசம் குணோ தேசியப் பூங்காவில் நிலவும் சூழலுக்கு ஏற்ப சிவிங்கி புலிகள், அவற்றை எப்படித் தகவமைத்துக் கொள்கின்றன என்பதைக் கண்காணிக்க பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு தெரிவிக்கும் முடிவுகளின் அடிப்படையில், சிவிங்கி புலிகளை மக்கள் காண அனுமதிக்கப்படுவர்.
சிவிங்கி புலிகள் தொடர்பான இயக்கத்துக்கு என்ன பெயர் வைக்கலாம், சிவிங்கி புலிகளுக்கு நமது பாரம்பரிய முறையில் என்னபெயர் வைக்கலாம் என்ற விஷயங்களை `மைகவ்’ (https://www.mygov.in/) இணையதளத்தில் பொதுமக்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
தற்போது இந்த சிவிங்கி புலிகளுக்கு சியாயா, ஒபான், சிபிலி, சியாசா, சவாணா, சாஷா மற்றும் ஃப்ரீடி என்ற பெயர்கள் உள்ளன.
ஒரு சிவிங்கி புலிக்கு `ஆஷா’ என்று பெயர் வைத்துள்ளேன். இந்த சிவிங்கி புலிகளுக்கு இந்திய பாரம்பரியப் பெயர்கள் வைக்க மைகவ் இணையதளத்தில் ஒருபோட்டி நடத்தப்படுகிறது. இதில்வெற்றி பெற்றால், சிவிங்கி புலிகளைப் பார்க்கும் முதல் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கலாம்.
தீவிர மனிதநேயவாதியும், சிந்தனையாளரும், பாரதத் தாயின் தவப் புதல்வருமான தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் இன்று (நேற்று).
மனிதர்களைச் சமமாக மதிக்கும் இந்திய சித்தாந்தத்தை, அவர் மீண்டும் உலகின் முன்பு நிலைநிறுத்தினார். நவீன, சமூக, அரசியல் பின்னணியிலும்கூட, இந்திய சித்தாந்தமானது எப்படி உலகுக்கு வழிகாட்ட முடியும் என்பதை தீன்தயாள் உபாத்யாயா நமக்குக் கற்பித்தார். அவருக்கு நாம் புகழாரம் சூட்டுவோம்.
வரும் 28-ம் தேதி அம்ரித் மகோத்ஸவத்தின் முக்கியமான நாள். அன்றைய தினம் பாரதத் தாயின் வீரம் நிறைந்த புதல்வன் பகத் சிங்கின் பிறந்த நாளை நாம் கொண்டாட உள்ளோம். மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான பகத் சிங்குக்கு புகழாரம் சூட்டும் வகையில், சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்பட உள்ளது. இது மிக நீண்ட காலமாக, நாம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்ச்சி.
நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் லட்சியங்களைப் பின்பற்றி, அவர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்.
பருவநிலை மாற்றம், கடல்சார் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரையில் குவியும் பெருமளவு குப்பை,சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த சவால்களை சமாளிக்க நாம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வது நமது கடமை. ‘தூய்மையான கடல்கள்-பாதுகாப்பான கடல்கள்’ என்ற இயக்கம் கடந்த ஜூலை 5-ம் தேதி தொடங்கப்பட்டு, கடந்த 17-ம் தேதி நிறைவடைந்தது.
இந்த இயக்கத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அவர்களுக்கு வாழ்த்துகள். நமது பண்டிகைகளின் மகிழ்ச்சியில், நமது உள்ளூர் கைவினைஞர்களுக்கும், கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாம் இடம் அளிக்க வேண்டும்.
நவராத்திரி, காந்தி ஜெயந்தி, தசராவை முன்னிட்டு, காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும். அதன்பின், தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்கி, உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார்.