சென்னை: செல்போன்களில் ஜிபிஎஸ் மட்டுமல்லாது NavIC நேவிகேஷனும் பயன்படுத்தும் வகையில் போன்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என இந்தியா சார்பில் செல்போன் உற்பத்தி செய்து வரும் நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இஸ்ரோ சார்பில் இந்திய பகுதிக்கான நேவிகேஷன் சாட்டிலைட் அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2013 வாக்கில் இது அறிமுகம் செய்யப்பட்டது. இது NavIC என அறியப்படுகிறது. இதன் மூலம் நேவிகேஷன் சார்ந்த தொழில்நுட்ப தேவைகளுக்காக வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்ற கணக்கில் இது அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தும், இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள செல்போன் உட்பட பெரும்பாலான சாதனங்களில் அமெரிக்காவின் ஜிபிஎஸ் சிஸ்டம் தான் நேவிகேஷனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனுடன் சேர்த்து NavIC-யை பயன்படுத்த வேண்டும் என செல்போன் உற்பத்தி நிறுவனங்களிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
அதாவது ஆப்பிள், சாம்சங், சியோமி உட்பட இன்னும் சில நிறுவனங்கள் இதில் அடங்கும் எனத் தெரிகிறது. இதனை இரண்டு செல்போன் உற்பத்தி மற்றும் அரசு தரவுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சிஸ்டத்தின் பயன்பாட்டை குறைப்பது மற்றும் இந்திய பகுதியின் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார ஆதாயம் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் ஜிபிஎஸ் சிஸ்டத்திற்கு மாற்றாக சொந்தமாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நேவிகேஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாட்டிலைட் துணைகொண்டு இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். அதைத்தான் சாட்டிலைட் நேவிகேஷன் என சொல்கிறார்கள்.
இந்த மாற்றம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. வரும் ஜனவரி முதல் இந்தியாவில் விற்பனையாகும் போன்கள் ஜிபிஎஸ் மற்றும் NavIC என இரண்டு நேவிகேஷன் சப்போர்டையும் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. இந்திய அரசின் இந்த அழுத்தம் செல்போன் உற்பத்தி நிறுவனங்களை கலக்கம் அடைய செய்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில், அது சார்ந்த மாற்றத்தை மேற்கொள்ளும்போது உற்பத்தி செலவு அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல். இது தொடர்பாக அண்மையில் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது.
சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படும் செல்போன்கள் அந்த நாட்டின் நேவிகேஷன் சிஸ்டத்தை பெற்றிருக்கும் வகையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே பாணியை இந்தியாவும் கடைபிடிக்கிறது.