சேலத்தில் ஜோடி ஆப் மூலம் பழகி மோசடி லாரி டிரைவரை திருமணம் செய்து முதலிரவில் நகை, பணத்துடன் ஓட்டம்

சேலம்: சேலத்தில் ஜோடி ஆப் மூலம் பழகி, லாரி டிரைவரை திருமணம் செய்து முதலிரவிலேயே பணம், நகையை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த இளம்பெண் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சாணார்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (48), லாரி டிரைவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு மகன் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் 2வது திருமணம் செய்வதற்காக செல்போன் செயலியான ஜோடி ஆப்பில் தனது விவரத்தை பதிவு செய்துள்ளார். அதே ஆப்பில் பதிவு செய்திருந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கவிதா (எ) பிரியா என்பவர் செந்திலிடம் அறிமுகமாகி போனில் பேசியுள்ளார். அப்போது கவிதா, தனக்கு கணவன் இல்லை. தனியாக வசிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். இதனால், சில மாதங்களாக செந்திலும், கவிதாவும் போனில் பேசி பழகியுள்ளார்.

அப்போது செந்திலை திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி சேலத்திற்கு கவிதா வந்துள்ளார். அவரை சேலம் அரியானூரில் உள்ள சிவன்கோயிலுக்கு அழைத்துச் சென்று செந்தில் திருமணம் செய்துள்ளார். அப்போது கவிதாவிற்கு அரை பவுனில் தோடு, கால் கொலுசு வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் சாணார்பட்டி சென்று வீட்டில் இரவு தங்கினர். மறநாள் காலையில் கவிதாவை காணவில்லை. வீட்டில் வைத்திருந்த ரூ.1.47 லட்சம் பணம், 4 செல்போன் ஆகியவற்றையும் காணவில்லை. அவற்றுடன் கவிதா ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை செந்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், கொங்கணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.

போலீசார், மோசடி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அப்பெண் சொந்த ஊர் மார்த்தாண்டம் எனக்கூறிய நிலையில், கோவை மாவட்டம் காளப்பநாயக்கன்பாளையத்தில் வசிப்பது தெரிந்தது. அங்கு சென்று விசாரித்ததில் அவர் இல்லை. அதனால், தொடர்ந்து அந்த மோசடி பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செல்போன் ஆப் மூலம் பழகி திருமணம் செய்து லாரி டிரைவரை ஏமாற்றி பணம், நகையை இளம்பெண் சுருட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.