2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை தொடர வேண்டாம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ ஆஜராகி இருந்தார். தனது கட்சிக்காரர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதால்,அரசியலமைப்பின் 35ஆவது சரத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.
மேலும் இத் தாக்குதல் தொடர்பாக பிரதிவாதியாக குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனை செய்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க மதகுருமார்கள், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள FR மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொறுப்புக்கூறலில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, ஏனைய தரப்பினரின் ஆட்சேபனைகளை கருத்திற் கொண்டுமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள் எதிர்வரும் புதன்கிழமை (27) தமது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் அறிவித்துள்ளது.