பெய்ஜிங்: சீனா குறித்தும் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின் பிங்குறித்தும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான சீன கடந்த 20, 30 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி என்பது மிகப் பெரியது. வெறும் சில தலைமுறைகளில் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகச் சீனா உருவெடுத்து உள்ளது.
மேலும், ஏழ்மையில் இருந்தும் பல கோடி பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசு சொல்கிறது. இந்தச் சூழலில் சில நாட்களாகச் சீனா குறித்து இணையத்தில் பரவும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஜி ஜின்பிங்
சீன அதிபராக உள்ளவர் ஜி ஜின்பிங். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங், சில நாட்களாகவே திடீரென மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இவர் கலந்து கொண்டார். கொரோனா பரவலுக்குப் பின்னர் ஜி ஜின்பிங் வெளிநாடு சென்றது அதுவே முதல்முறையாகும். அதை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில், அப்போது முதல் இவர் பொது நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
பரவும் தகவல்
இதனால் ஜி ஜின்பிங் குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதாவது உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய போது ஜி ஜின்பிங் விமான நிலையத்திலேயே அந்நாட்டு ராணுவம் கைது செய்ததாகவும் அங்கு ராணுவ புரட்சி நடைபெற்றதாகவும் எல்லாம் தகவல் பரவியது. இருப்பினும், இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி அல்லது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகத்திடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.
சோஷியல் மீடியா
அதேநேரம் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக வலைத்தள பக்கங்கள் எல்லாம் வழக்கம் போலவே உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி வரும் அக்டோபர் 16இல் நடைபெற உள்ள நிலையில், அதற்காகத் தேவையான பணிகள் நடந்து வருவதாகவே தெரிகிறது. இதில் தான் ஜின்பிங் மூன்றாவது சீன அதிபராகத் தேர்வு செய்யப்பட உள்ளார். சரி இதுவரை பரவும் தகவல் என்ன அதற்கான விளக்கம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
ஜி ஜின்பிங் வீட்டுக்காவல்?
அவர் உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய உடன் அவர் எவ்வித பொது நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இருப்பினும், இதை வல்லுநர்கள் மறுத்து உள்ளனர். சீனாவில் கடுமையான கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. எனவே வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஜி ஜின்பிங் இப்போது தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
விமானங்கள் ரத்து?
சீன தலைநகர் பெய்ஜிங் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிவிரைவு ரயில்கள் கேன்செல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூட தகவல்கள் வெளியாகி உள்ளன. பெய்ஜிங் சர்வதேச ஏர்போர்டின் இணையதளத்தில் சில விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகக் காட்டுகிறது. பெரும்பாலான விமானங்கள் சற்று தாமதமாக மட்டுமே இயக்கப்படுவதாகக் காட்டுகிறது. அங்கு கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு விமானங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. விமானங்கள் குறைந்தது போலத் தெரிய இது ஒரு காரணமாக இருக்கலாம்.
சீனாவில் என்ன நடக்கிறது?
சீனாவில் ஊழல் வழக்கில் கடந்த வாரம் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல நான்கு அதிகாரிகள் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது தண்டனை பெற்ற அனைவரும் ஜி ஜின்பிங்கிற்கு சவால் கொடுக்கும் வகையில் இருந்தவர்கள் என்றும் இது நாட்டில் அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.