மதுரை: தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப் பதிவு விபரங்களை தாக்கல் செய்ய பதிவுத் துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வீரபாண்டி பேரூராட்சியில் அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகள் பத்திரப் பதிவு செய்யப்படுகிறது. இந்த முறைகேடான பத்திரப் பதிவுகளை ரத்து செய்து, அங்கீகாரம் பெறாத மனைகளை பத்திரப் பதிவு செய்யும் பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்ததுபோது, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வீரபாண்டி சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயணபிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ”அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப் பதிவு செய்யப்படுவதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பத்திரப் பதிவு சட்டத் திருத்தம் 22- ஏ அமலுக்கு வந்த பிறகு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப் பதிவு நடைபெற்றிருந்தால் அதன் விபரங்களை புள்ளி விபரங்களுடன் பதிவுத் துறை தலைவர் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். பின்னர் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.