சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி சென்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் பாஜ, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
5 நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர், இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்த சம்பவங்கள் குறித்து கவர்னர் பேசுவார் என்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, தனது சொந்த அலுவல் காரணமாகவும் டெல்லியில் தங்கி இருக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கவர்னர் ஆர்.என்.ரவி இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை டெல்லியில் தங்கியிருந்து விட்டு சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.