பர்கர்: ஒடிசாவில் இறந்த நோயாளியின் உடலை தலித் மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ததால், அவரது உடலை வாங்க குடும்ப உறவுகள் மறுத்துவிட்டன. அதனால் இறந்தவரின் உடலை தனது பைக்கில் கட்டிச் சென்று பஞ்சாயத்து தலைவரின் கணவர் தகனம் செய்தார். ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தை சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளியான முச்சுனு சந்தா என்பவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனை செய்தார்.
பின்னர் உறவினர்களிடம் முச்சுனுவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மருத்துவர் செய்துள்ளார் என்பதை அறிந்த கிராம மக்களும் உறவினர்களும், உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கிராம பஞ்சாயத்து பெண் தலைவரின் கணவர் சுனில் பெஹரா, முச்சுனுவின் உடலை ஆம்புலன்சில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார். அதன்படி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முச்சுனுவின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை சரியில்லாததால் ஆம்புலன்ஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
அதிர்ச்சியடைந்த சுனில் பெஹரா, தனது பைக்கில் முச்சுனுவின் உடலை கட்டிக் ெகாண்டு, ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் உதவியுடன் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு முச்சுனுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து சுனில் பெஹரா கூறுகையில், ‘எங்களது கிராமத்தில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு கிராம மக்கள் வருவதில்லை. முச்சுனுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால், அவரது இறுதிச் சடங்கில் மக்கள் கலந்து கொள்ளவில்லை.
மேலும் அவரது குடும்பத்தினர் யாரும் தகனம் செய்ய முன்வராததால், எனது பைக்கில் அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இறந்த முச்சுனுவிற்கு அவரது கர்ப்பிணி மனைவி, மூன்று வயது மகள், அவரது தாயார் ஆகியோர் உள்ளனர். அவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது’ என்றார். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மருத்துவர் முச்சுனுவின் உடலை பிரேத பரிசோதனை செய்ததால், இறுதிச் சடங்கிற்கு ஊர் மக்கள் வரவில்லை என்பது குறித்து உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.