தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், பல இடங்களில் திடீரென மழை கொட்டியது.
கடந்த 2 வாரங்களாக வெயிலில் தகித்த சென்னையை குளிர்விக்கும் வகையில் மாலையில் பரவலாக மழை பெய்தது. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுதாங்கல் என பல்வேறு இடங்களில் திடீரென பெய்த மழையால் சில இடங்களில் தண்ணீரும் தேங்கியது. சென்னையின் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, போரூர், பல்லாவரம், குரோம்பேட்டையிலும் கனமழை பெய்தது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை வெயிலின் தாக்கத்தை குறைத்து குளிர்ச்சியடைய செய்துள்ளதாக மக்கள் மகிழ்ந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் முடிந்தும் கடந்த சில நாட்களாக சுமார் 90 டிகிரி பாரன்ஹீட் அளவு வரை வெயில் கொளுத்தி வந்தது. இதனால் வேலூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் வெப்பச்சலனம் காரணமாக திடீரென மழை பெய்ய தொடங்ககியது. வேலூர், காட்பாடி, கருகம்புத்தூர், சத்தூவாச்சாரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒன்னறை மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதுபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மித முதல் கனமழை வரை பெய்துவருகிறது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM