தில்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா – தமிழ்நாடு ஆளுநர் RN.ரவி. சந்திப்பு!

தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளித்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகியவற்றை பிஎப்ஐ அமைப்பும், அதன் நிர்வாகிகளும், எஸ்டிபிஐ கட்சியும் செய்துவருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், NIA அமைப்பும், அமலாக்கப்பிரிவும் இணைந்து 11 மாநிலங்களில் அதிரடியாக சோதனை நடத்தின. தேசிய புலானய்வு முகமை நடத்திய சோதனையில், இதுவரை 106 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்பை சேர்ந்த நபர்களை NIA கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, SDPI பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக அலுவலகம், ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த நபர்களின் வீடுகள் ஆகியவற்றின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி வந்தனர். கடந்த 2 நாட்களாக கோவை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து மாநில தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நிலவி வரும் பல்வேறு சூழல் குறித்து அமித் ஷாவிடம் ஆளுநர் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஏற்கனவே பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் தேவையற்ற தொந்தரவுகளுக்கு ஆளாவதாகவும், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை என்றும் அண்ணாமலை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.