கொழும்பு: இலங்கையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய 84 போராட்டக்காரர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம் நடைபெற்றதால், அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் பதவி விலகினார்.
இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், அதிபர் ரணில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டார். அதில், “அதிபரின் செயலகம், அதிபரின் இல்லம், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற வளாகம், உயர் நீதிமன்ற வளாகம், கடற்படை, காவல் துறை தலைமையகம் உள்ளிட்ட பகுதிகள் உயர் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மீறி போராட்டத்தில் ஈடுபடுவோரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசின் இந்த உத்தரவைக் கண்டித்து சோஷலிஸ்ட் யூத் பிரன்ட் அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கொழும்பு நகரின் லிப்டன் சர்கஸ் பகுதியிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை பேரணியாக செல்ல முயன்றனர்.
அப்போது அவர்கள், ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடுவோரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதன் பிறகும் கலைந்து செல்ல மறுத்த 84 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அரசின் உத்தரவு பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக இருப்பதால் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.