‘வலிமை’ படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர். ஏகே61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சமீபத்தில் அதிகாரபூர்வமாக துணிவு என்று பெயரிடப்பட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘துணிவு’ படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் கதை குறித்தும், இதில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்தும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. 1987ம் ஆண்டு பஞ்சாபில் நடந்த ஒரு வங்கி கொள்ளையை பற்றியது தான் என்று கூறப்படுகிறது, இந்த கொள்ளை சம்பவத்தில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்த கொள்ளையர்கள் போலீசை போல உடையணிந்து கொண்டு கையில் சப்மெஷின் துப்பாக்கி மற்றும் சில ரைஃபிள்களை வைத்து வங்கியில் உள்ளவர்களை மிரட்டி ரூ.6 கோடி கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கு கிட்டத்தட்ட 30 வருடங்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு தான் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 13 பேரில், 9 பேரை குற்றவாளிகளாக கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இருவர் இறந்துவிட்டனர் மற்ற இருவர் விடுதலை ஆனார்கள். இந்த சம்பவம் அந்த காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இன்றுவரை வரலாற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘துணிவு’ படத்தில் அஜித் லாப் சிங் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், லாப் சிங் தான் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி கொள்ளைகள் பற்றிய பல ரகசியமான தகவல்களை அஜித்தை வைத்து துணிவு படத்தின் மூலம் இயக்குனர் ஹெச்.வினோத் கூறவிருக்கிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார், தீபாவளி பண்டிகையையொட்டி படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தினால் படத்தை 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட இருப்பதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே தினத்தில் விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளது.