துலீப் கோப்பை கிரிக்கெட்: மேற்கு மண்டல அணி 'சாம்பியன்'

கோவை,

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு மண்டலம் – தென் மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மேற்கு மண்டலம் 270 ரன்களும், தென் மண்டலம் 327 ரன்களும் எடுத்தன. 57 ரன்கள் பின்தங்கிய மேற்கு மண்டலம் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (265 ரன்) அடித்தார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 529 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென் மண்டலம் 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென் மண்டலம் 71.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 294 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்த மேற்கு மண்டல அணி துலீப் கோப்பையை கைப்பற்றியது.

முன்னதாக ரவி தேஜா (53 ரன்) பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அருகில் பீல்டிங்கில் நின்ற மேற்கு மண்டல வீரர் ஜெய்ஸ்வால் அடிக்கடி அவரை சீண்டி கொண்டே இருந்தார். தொடர்ச்சியான அவரது வசைபாடுதலால் எரிச்சல் அடைந்த தேஜா 57-வது ஓவரின் போது நடுவரிடம் முறையிட்டார்.

இது குறித்து அறிந்த மேற்கு மண்டல கேப்டன் அஜிங்யா ரஹானே, ஜெய்ஸ்வாலை எச்சரிக்கை செய்ததுடன் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அவரை களத்தை விட்டு வெளியே போகும்படி உத்தரவிட்டார். இதனால் சிறிது நேரம் மேற்கு மண்டல அணி 10 வீரர்களுடன் பீல்டிங் செய்தது. 7 ஓவருக்கு பிறகு ஜெய்ஸ்வால் மீண்டும் களம் திரும்பி பீல்டிங் செய்தார்.

இது குறித்து ரஹானே கூறுகையில், ‘எதிரணி வீரர்கள், நடுவர்கள், போட்டி உதவியாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். இத்தகைய விஷயங்களை இது மாதிரி தான் கையாள வேண்டும்’ என்றார்.

சர்ச்சையில் சிக்கிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.