சியோல் : ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக கிழக்காசிய நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்க போர் கப்பல் வந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே கடுமையான போர் பகை நிலவி வருகிறது. வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
இதனால், அந்நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவை எதிரி நாடுகளாக கருதுகிறது. ஐ.நா., சபையின் தடை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வட கொரியா தொடர்ந்து பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.இதற்கிடையே ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல், சமீபத்தில் தென் கொரியாவை வந்தடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா, நேற்று ஏவுகணை சோதனையை நடத்தி பதிலடி கொடுத்தது. இத்தகவலை வெளிப்படுத்திய தென் கொரிய ராணுவம், ‘வட கொரியாவின் இச்செயல் ஆத்திரம் ஏற்பட வைக்கிறது. வட கொரியா ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதுடன், பிராந்தியம் மற்றும் உலக நாடுகளின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுகிறது’ என, கண்டனம் தெரிவித்து உள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனையால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement