கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஸி. அவர் நடித்து சமீபத்தில் வெளியான `சட்டம்பி’ என்ற சினிமா புரமோஷனுக்காக, ஸ்ரீநாத் பாஸியிடம் ஒரு ஆன்லைன் செய்தி சேனல் நேர்காணல் நடத்தியது. அப்போது நடிகைகளை ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி கூறும்படி ஸ்ரீநாத் பாஸியிடம் கேள்வி கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமான ஸ்ரீநாத் பாஸி, தன்னிடம் கேள்வி கேட்ட பெண் தொகுப்பாளரை மோசமான வார்த்தைகளால் திட்டி கேமராவை ஆஃப் செய்யும்படி கூறியுள்ளார். கேமராவை ஆஃப் செய்த பிறகு பெண் தொகுப்பாளரை மிக மோசமாகத் திட்டியதுடன், அவரை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொச்சி மரட் காவல் நிலையத்திலும், பெண்கள் ஆணையத்திலும் பெண் தொகுப்பாளர் புகார் அளித்தார். மரட் காவல் நிலையத்தில் ஸ்ரீநாத் பாஸி மீது பெண்ணை அவமானப்படுத்தியதாக ஐ.பி.சி செக்ஸன் 509, 354(ஏ), 294 பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கொச்சி மரட் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீநாத் பாஸிக்கு அறிவிப்பு கொடுத்திருந்தனர். ஸ்ரீநாத் பாஸி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மதியத்துக்கு மேல் அவர் மரட் காவல் நிலையத்தில் ஆஜரானார். காவல் நிலையத்தில் ஆஜரான ஸ்ரீநாத் பாஸியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால், பெண் தொகுப்பாளரை கெட்டவார்த்தையால் திட்டவில்லை என ஸ்ரீநாத் பாஸி தெரிவித்துள்ளார். `என்னிடம் மோசமாக நடந்து கொண்டதால், சாதாரண மனிதனாக நான் என் எதிர்ப்பை தெரிவித்தேன்’ எனவும் ஸ்ரீநாத் பாஸி கூறியுள்ளார்.
ஸ்ரீநாத் பாஸியிடம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் ஸ்டேஷன் ஜாமினில் அவரை விடுவித்தனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மீடியாவிடம் எதுவும் பேச விரும்பவில்லை என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்தில், பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீநாத் பாஸியையும், `சட்டம்பி’ சினிமா தயாரிப்பாளரையும் அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.