பக்தர்களிடம் செல்போன் திருட முயன்றவர் சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தற்கொலை

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (41). இவர், நேற்று காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்றதாக கோயில் காவலாளிகள் பாலாஜி, குரு ஆகியோர் பிடித்து சமயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது செல்போன் திருட முயன்றதாக வழக்கு பதிந்து லாக்கப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட முருகானந்தம், கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் பொது கழிவறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வராததால் போலீசார் சந்தேகம் அடைந்து, கழிவறை கதவை தட்டி பார்த்தனர். பலமுறை தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால் போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் கம்பியில் முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், முருகானந்தம் மீது ஏற்கனவே அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அவரது தாயை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இவருக்கு பிடிவாரன்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. குடிபோதைக்கு அடிமையான முருகானந்தம் கடந்த 10 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து சென்றதும் தெரிய வந்தது. இதுபற்றி நேரில் விசாரித்த திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் கூறும்போது,  கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எஸ்பி சுஜித்குமார் கூறுகையில், பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது துறை ரீதியான நடக்கடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.