பழனி: பழனி முருகன் கோயிலுக்கு வந்த ராணுவ வீரர் ஒருவர் தனது பர்ஸை தவறவிட்டதாகவும் அதில் ராணுவம் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாகவும் அதை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுமாறும் கண்ணீர் மல்க வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் மனோ. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது அவர் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மனோ புகார் அளித்தார்.
சிசிடிவி கேமரா
அப்போது அடிவாரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதில்லை என்பதால் பர்ஸை கண்டறிவதில் சிக்கலும் சிரமமும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் தொலைத்த பர்ஸை எடுத்தவர்கள் அதில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என கெஞ்சும் ஒரு வீடியோவை மனோ வெளியிட்டுள்ளார்.
ஆவணங்கள்
அந்த பர்ஸில் ராணுவம் தொடர்பான ஆவணங்கள், அடையாள அட்டைகள் உள்ளதாகவும் அதை மட்டும் தனக்கு வேண்டும் என்றும் , தனது பர்ஸை யாராவது கண்டுபிடித்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு மனோ அந்த வீடியோவில் கேட்டு கொண்டார்.
பழனி கோயில்
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து அவர்களிடம் இருந்து பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளது. இதனை சரி செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பழுதான கேமராக்கள்
ஆனால் அந்த கேமராக்கள் சில நாட்களிலேயே பராமரிப்பின்றி பழுதடைந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் போது சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை செய்ய போலீஸாருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களை கொண்டுதான் பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது ஆயிரக்கணக்கிலான மக்கள் வந்து செல்லும் இடத்தில் சிசிடிவி கேமராவை பழுதுநீக்கம் செய்யுமாறு அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.