பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை அரை சதவிகிதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்தது. இதனைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 1.4 விழுக்காடு உயர்த்தியது. இருப்பினும் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வரும் 30ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிதிக்கொள்கையின்போது வட்டி விகிதங்கள் அரை சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா பொது முடக்கத்தின்போது, வட்டி விகிதங்கள் 5.15 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடு வரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்ட இந்த வட்டிவிகிதங்கள் தற்போது 5.40 விழுக்காடாக உள்ளது. மேலும் அரை சதவிகிதம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் பட்சத்தில் வட்டிவிகிதம் 5.90 விழுக்காடு என்ற புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM