புதுடெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பதவியேற்ற பின்னர் முதன் முறையாக கர்நாடகா மாநிலத்திற்கு இன்று செல்கிறார். தொடர்ந்து தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். இந்திய குடியரசுத் தலைவராக கடந்த சில வாரங்களுக்கு முன் திரவுபதி முர்மு பதவியேற்றார். அவர் அரசு முறைப் பயணமாக முதன்முறையாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக லண்டன் சென்று வந்தார். நாடு முழுவதும் எந்த மாநிலத்திற்கும் செல்லாத நிலையில், முதன் முறையாக இன்று இரண்டு நாள் பயணமாக கர்நாடகா செல்கிறார்.
இதுதொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலம் மைசூரு சாமுண்டி மலையில் நடைபெறும் தசரா விழாவை குடியரசுத் தலைவர் இன்று (செப். 26) தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ஹூபாலியில் ‘பூர சன்மனா’ என்ற விழாவில் கலந்து கொள்கிறார். தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார். பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் இன்ஜின்கள் தயாரிப்பு பிரிவை நாளை திறந்து வைக்கிறார். மேலும் வைராலஜி மண்டல நிறுவனத்திற்கான (தென் மண்டலம்) அடிக்கல் நாட்டுகிறார். அதே நாளில் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.