சென்னை: ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜோஸ்வா என்கிற திரைப்படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் கௌதம்.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் அண்ணாச்சியாக நடித்த நடிகர் ரிச்சர்ட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
டிரெய்ன் பயணம்
தூத்துக்குடி ரயிலில் சென்னையிலிருந்து ரிச்சர்ட் என்ற நபர் கூபே கம்ப்பார்ட்மெண்டில் பயணித்துள்ளார். ரயில் கிளம்பும் ஒரு சில வினாடிகளுக்கு முன்பு அதே கூபே கம்ப்பார்ட்மெண்டில் சக பயணி ஒருவர் ஏறி இருக்கிறார். அந்த நபரின் குரலை கேட்ட ரிச்சர்டிற்கு ஏற்கனவே பரிட்சையமான குரல் போல இருக்கிறதே என்று தோன்றியுள்ளது. அப்போது நன்கு யோசித்ததில் அது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனாக இருக்கலாம் என்று ரிச்சர்டிற்கு தோன்றியதாம். ஆனால் கௌதமின் பேட்டிகளை இதற்கு முன்னர் அவர் பார்த்ததில்லையாம். சந்தேகத்துடன் தான் அவருடன் பேசினாராம் ரிச்சர்ட்.
பழம் வேணுமாண்ணா…
அதன் பிறகு தனது ஐ-பேடில் எதையோ படிக்க துவங்கினாராம் கௌதம். ரிச்சர்ட் தனது இரவு உணவை முடித்த பின்னர் பழம் சாப்பிட்டுவிட்டு கௌதமிடமும் பழம் சாப்பிடுகிறீர்களா அண்ணா என்று கேட்டாராம். அப்போதுதான் அவர்களது உரையாடல் துவங்கியிருக்கிறது. தூத்துக்குடி ரயிலில் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று ஆச்சரியப்பட்டு கேட்டவரிடம் படப்பிடிப்பிற்காக திருச்செந்தூர் செல்கிறேன் என்று கௌதம் கூறினாராம்.
ரிச்சர்ட் ஆச்சர்யம்
நீங்கள் வழக்கமாக சென்னை பெங்களூரு போன்ற இடங்களில் தானே படப்பிடிப்பு நடத்துவீர்கள். கிராமத்தை நோக்கி பயணிக்கிறீர்களே என்று கேட்டதற்கு இந்தக் கதை அங்கிருந்து தான் துவங்குகிறது என்று கதையை விவரிக்க ஆரம்பித்தாராம் கௌதம். வழக்கமாக இயக்குநர்கள் கதையை கூற மாட்டார்களே என்று ஆச்சரியப்பட்டு கேட்டபோது, படத்தில் இசக்கி என்கிற கதாபாத்திரம் இருக்கிறது. நீங்கள் நடிக்கிறீர்களா என்று கௌதம் கேட்டது மட்டுமில்லாமல் தனது நம்பரையும் கொடுத்துவிட்டு ரிச்சர்டின் நம்பரையும் வாங்கி வைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் கழித்து கால் செய்யுங்கள் என்று கூறினாராம்.
படப்பிடுப்பில் ரிச்சர்ட்
நடந்த சம்பவத்தை சினிமா துறையில் இருக்கும் தன்னுடைய சகோதரனிடம் கூறிய போது அவர் நம்பவில்லையாம். பிறகு இரண்டு நாட்கள் கழித்து கௌதமிற்கு ஃபோன் செய்ய உடனே எடுத்து பேசிய கௌதம் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரச் சொல்லி லொகேஷன் அனுப்பி வைத்தாராம். அங்கு பிரபலமாக இருக்கும் அல்வா போன்ற இனிப்புகளை வாங்கிக் கொண்டு தனது சகோதரருடன் கௌதமை சென்று சந்தித்திருக்கிறார் ரிச்சர்ட். அன்றே அவரை வைத்து டெஸ்ட் ஷூட் எடுத்து பின்னர் சென்னைக்கு வரவழைத்து நான்கு நாட்கள் அவரை சூட்டிங்கில் நடிக்க வைத்துள்ளனர். அப்படித்தான் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் அண்ணாச்சியாக நடித்தேன் என்று ரிச்சர்ட் கூறியுள்ளார்