`பாஜகவின் மிரட்டலினால் தமிழக காவல்துறை இப்படி செய்கிறது'- எஸ்.டி.பி.ஐ நெல்லை முபாரக்

“பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஆதாரமில்லாமல் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவில்லை என்றால் வரலாற்று பிழையாக மாறும்” என அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்ணடியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எஸ்.டி. பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சில தினங்களுக்கு முன்னாள் NIA நடத்திய சோதனையில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சார்ந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். இதுவரை அவரை எதற்காக கைது செய்தோம் என NIA தெரிவிக்கவில்லை. FIR வழங்கவில்லை; தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத நபர் உலகம் முழுவதும் தொடர்பு வைத்திருந்தார் என பொய் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அவரது வீட்டில் எந்த ஒரு பொருளும் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கையொப்பம் பெறாத நிலையில், `SATELITE செல்போன் வைத்திருந்தார்’ என பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
image
மேலும் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் எந்த ஒரு தொடர்பும் இல்லாத கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் எஸ்.டி. பி.ஐ கட்சியின் நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியை பொறுத்தவரை ஒருபோதும் வன்முறைக்கு செல்லாத ஒரு கட்சி; சமூக நீதி குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் கட்சி; NIA விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்வாகி கூட சட்டப்பூர்வமாக போராடி வரும் நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது குண்டு வீசும் அவசியம் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தமிழக காவல்துறை ஏன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்?
பாஜகவின் மிரட்டல் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. உடனடியாக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றால், இது ஒரு வரலாற்று பிழையாக மாறும். தவறு செய்த நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் பாஜகவின் அழுத்தத்திற்கு உள்ளாகி கைது செய்வதை ஏற்றுகொள்ள முடியாது.
image
தங்கள் வீட்டில் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசிய வரலாறு கோவையில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் மீது இருக்கும் நிலையில், அவர்களிடம் ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை? இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளோம். முன்னதாக டி.ஜி.பி – ஐ மாலை சந்திக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.