பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை லிடிமிலா சாம்சோனோவா 'சாம்பியன்'

டோக்கியோ,

37-வது பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வந்தது.

இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 30-ம் நிலை வீராங்கனையான லிடிமிலா சாம்சோனோவா (ரஷியா) 7-5, 7-5 என்ற நேர் செட்டில் சீனாவின் கின்வென் செங்கை தோற்கடித்து மகுடம் சூடினார்.

இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடங்கள் நீடித்தது. அவருக்கு ரூ.95 லட்சமும், 2-வது இடம் பிடித்த கின்வென் செங்குக்கு ரூ.59 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 23 வயதான சாம்சோனோவா வென்ற 4-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் 20-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.