ஜர்னலிசம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் தனியார் கல்லூரியில் ஜர்னலிசம் படித்து வரும் மாணவியை உபர் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். தோழியுடன் நேற்று இரவு உபர் ஆட்டோவில் வந்தபோது தவறாக நடந்து கொண்டதாக பதிவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் விசாரிக்க பெண் போலீஸ் இல்லாமல் தான் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் வந்து காவலர் ஒருவர் விசாரித்தாகவும், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் வகையிலேயே காவலர்கள் பேசியதாகவும், காவல் நிலையம் வெளியிலேயே நின்று கொண்டு காவல் நிலையத்தில் மனுவை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் புகைப்படம் மற்றும் உபர் ஆட்டோவில் பயணித்த தகவல் குறித்தும் போட்டோ ஆதாரங்களுடன் சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் செல்வம் என்பவர் தவறாக நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஆட்டோ ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் டிவிட்டர் பக்கத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாகவும் பதிலளித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM