மதுரை: மதுரை மேல அனுப்பானடி பகுதியில் வசிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்க நிர்வாகி கிருஷ்ணனுக்கு சொந்தமான கார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மதுரை நகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், ‘‘தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ நடத்திய சோதனையைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் என 22 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளன. இவற்றில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரே ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். முக்கிய நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி கிருஷ்ணன் வீட்டுக்கு சுழற்சி முறையில் தினமும் 2 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க, காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கெனவே பிற அமைப்பால் மிரட்டலுக்கு உட்பட்ட பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தலா ஒரு காவலர் என முன் எச்சரிக்கை அடிப்படையில் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.