சென்னை: பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 1,410 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும், வாகனங்கள் மீது கல்வீச்சு போன்றவன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், பெட்ரோல், மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள்மீது வீசியுள்ளனர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் முக்கிய நபர்களின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர வாகனசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் கைதுசெய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், 100 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விற்க கட்டுப்பாடு
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தடுக்க, கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்று பெட்ரோலிய நிறுவனங்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். கேன் உள்ளிட்டவற்றில் விற்பனைசெய்யக்கூடாது என பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், அதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.