பொன்னியின் செல்வன் அறிமுகம் 4: கதையின் திருப்புமுனை; ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் ஒரு பார்வை!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையைக் காணக் காத்திருக்கிறது. அதையொட்டி `பொன்னியின் செல்வன்’ நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான ஒரு அறிமுகம்தான் இந்தப் பகுதி.

கார்த்தி, ஜெயராம்

ஆழ்வார்க்கடியான் நம்பி அநிருத்தப் பிரம்மராயரின் ரகசிய ஒற்றன், நந்தினியின் வளர்ப்பு அண்ணன், வைணவ சமயத்தின் தீவிர பக்தன். நாவலின் ஓட்டத்தை மடைமாற்றி சுவாரஸ்யம் கூட்டும் கல்கியின் கற்பனைக் கதாபாத்திரம்.

கல்வெட்டு, வரலாறு மற்றும் இலக்கியத்தில் கிடைத்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பார் அமரர் கல்கி. அதேசமயம் நாவலின் ஓட்டத்தை சுவாரஸ்யமாக்கவும், கதைக்களத்தைப் புரிய வைக்கவும் சில கற்பனைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருப்பார். அப்படி உருவாக்கப்பட்ட இரண்டு சிறப்பானக் கதாபத்திரங்களில் ஒன்று நந்தினி, மற்றொன்று இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம்.

ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம் | அநிருத்தப் பிரம்மரார் – பிரபு

திருமலையப்பன் என்பது ஆழ்வார்க்கடியானின் இயற்பெயர். திருட்டு முழி, உடம்பெல்லாம் சந்தனம், நெத்தியில் நாமம், தலையில் முன்குடும்பி, கையில் குறுந்தடி எனக் கட்டையும் குட்டையுமாக வைணவ சமய அடையாளங்கள் நிறைந்த தோற்றத்துடன் நாவல் தொடங்கிய சில பக்கங்களிலேயே அறிமுகமாகிவிடுவார். வந்தியத்தேவன் வழியே அறிமுகமாகும் நம்பி, சைவ – வைணவ சமயத்திற்கான வாக்குவாதத்தை நாவலில் தொடங்கி வைத்தபடி வந்தியத் தேவனுக்கும் வாசர்களுக்கும் அறிமுகமாகியிருப்பார். ஆழ்வார்க்கடியான் நம்பி வைணவ சமயத்தின் தீவிர பக்தன். எனவே நாவல் முழுவதும் சைவ – வைணவ சண்டை எங்கு நடந்தாலும் அங்கு வைணவ சமயத்தைத் தூக்கிப்பிடித்துப் பேச ஆழ்வார்க்கடியான் நம்பி நிச்சயம் இருப்பார். சைவ சமயத்தினரை வெறுப்புடன் வம்புக்கு இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

வந்தியத் தேவன் எப்படி ஆதித்த கரிகாலனின் ரகசிய ஒற்றனாக நாவலில் பயணிக்கிறானோ அதேபோல சோழப் பேரராசின் அமைச்சரான அநிருத்தப் பிரம்மராயரின் ரகசிய ஒற்றனாக நாவல் முழுவதும் பயணிக்கும் கணிக்க முடியாத நகைச்சுவை நிறைந்த ஒரு சுவாரஸ்யக் கதாபத்திரம்தான் இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி. சோழத் தேசத்தில் நடக்கும் ரகசியங்களை லாகவமாக அறிந்து கொண்டு அதை அநிருத்தப் பிரம்மராயருக்கு அனுப்புவதுதான் இவரது தலையாயக் கடமை. இதனிடையே நாவலின் குறுக்கே தீடீர் தீடீரெனத் தோன்றும் இந்தக் கதாபாத்திரம் கதையில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கும்.

ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம் |வந்தியத் தேவன் – கார்த்தி

வந்தியத்தேவன் மற்றும் நம்பி இருவருக்குமான பரஸ்பர நட்பு, வாக்குவாதங்கள், சண்டைகள் ஆகியவை நாவலை இன்னும் சுவாரஸ்யமாக்கும் வகையில் அமைந்திருக்கும். அறிமுகமில்லாமல் சோழத் தேசத்தில் பயணிக்கும் வந்தியத்தேவனுக்கு ஆலோசனைகள் வழங்குவது, துருப்புச் சீட்டைப் போல நந்தினி பற்றிய உண்மைகளை அவ்வப்போது வந்தியத்தேவனிடம் சொல்லிச் செல்வது, தக்க சமயத்தில் வந்தியத்தேவனுக்கு உதவி செய்து காப்பாற்றுவது, குந்தவை மற்றும் வந்தியத் தேவனுக்கும் இடையில் காதல் ஏற்பட முக்கியக் காரணமாக அமைவது எனத் திறமை மிகுந்த ஒற்றனாகவும், வந்தியத் தேவனின் நண்பனாகவும், நந்தினியின் தத்தெடுத்த அண்ணனாகவும் பயணிக்கும் கதாபாத்திரம்தான் இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஜெயராம் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். நாவலில் ஆழ்வார்க்கடியான் நம்பி வரும் எந்தக் காட்சி உங்களுக்குப் பிடிக்கும் என்று கமென்ட்டில் பதிவிடவும்.

ஜெயம் ரவி, மோகன் ராம், ஜெயராம்

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த விகடன், இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் மீண்டும் நம் வாசகர்களை வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.