சென்னை : நடிகர் தனுஷ் நல்லவராகவும் கெட்டவராகவும் இருவேறு வேடங்களில் நடித்துள்ள படம் நானே வருவேன்.
இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு தன்னுடைய அண்ணன் செல்வராகவனுடன் இணைந்துள்ளார் தனுஷ்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து நானே வருவேன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அவரது 4 படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியான நிலையில், ரசிகர்கள் வெறுத்துத்தான் போனார்கள். இதையடுத்து கடந்த மாதத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
திருச்சிற்றம்பலம் படம்
இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் போட்டிப் போட்டு நடித்திருந்தனர். இருவரது நடிப்பும் இயல்பாக கதைக்கு தேவையான அளவில் அமைந்திருந்தது. மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களும் படத்திற்கு வலு சேர்த்திருந்தனர்.
அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. குறிப்பாக தன்னுடைய சகோதரருடன் நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் இணைந்துள்ள நானே வருவேன் படம் இந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் சில தினங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது.
பொன்னியின் செல்வனுடன் மோதல்
இந்தப் படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதவுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்த தனது பேட்டியில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் திறந்துள்ளார். இந்த ஆயுதபூஜை பண்டிகைக்கான விடுமுறையை தான் மிஸ் செய்ய விரும்பவில்லை என்றும் இதேபோல தான் தான் அசுரன் படத்தையும் ரிலீஸ் செய்தாகவும் தெரிவித்துள்ளார்
தயாரிப்பாளர் தாணு விளக்கம்
ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசானாலும் அந்தந்த படங்களின் தகுதிக்கேற்ப அந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பை பெறும் என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் காப்பி உருவாகும்வரை தான் காத்திருந்ததாகவும் சென்சார் அனுப்பிவிட்டே தான் படத்தின் அறிவிப்பை மேற்கொண்டதாகவும் அதனால்தான் படத்தின் அறிவிப்பு தாமதமானதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.